Friday, May 09, 2014

கொசுவத்தி பதிவுகள்

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, என்னுடைய வகுப்பில் 120 பேர் இருந்தோம். அத்தனை பேரும் தரையில் தான் அமருவோம். வாத்தியார் கூப்பிட்டால் எழுந்து வரவும் முடியாது. அவராலும் எல்லோரையும் தாண்டி வந்து அடிக்க இயலாது. தூங்கினால் கூட தெரியாது, அவ்வளவு கூட்டமாக இருக்கும். இவ்வளவு நலன்களைத்தாண்டி ஒரே பிரச்சனை, காற்று வசதி. ஒரு ஜன்னல் தான் இருக்கும். எவனாவது குசுவிட்டால் பக்கத்தில் இருப்பவர்கள் செத்தார்கள். துர்நாற்றம் சுத்தி சுத்தி அங்கேயே இருக்கும். சில சமயம் வாத்தியரே எழுந்து திட்டிக் கொண்டே வெளியே போய்விடுவார்.


ஓலைக் கூரை என்பதால் கனமழை பெய்தால், தரை முழுக்க ஈரமாகி ஒன்று-இரண்டு நாட்களுக்கு விடுமுறை கிடைக்கும். பிறகு ஓலைக் கூரையை சீமைஓடாக மாற்றினார்கள். கத்தி போய் வால் வந்த கதையாக, வெப்பம் தாங்க முடிவதில்லை. வெள்ளாவிகுள்ள தூக்கிப் போட்டது போல இருக்கும். ஒரு வழியாக, எல்லா மாணவர்களிடம் கட்டாயமாக பணம் வசூலித்து மின்விசிறியும், குழல்விளக்கும் பொருத்தினார்கள். 

ஆறிலிருந்து ஏழாம் வகுப்பிற்குச் செல்லும்போது, வகுப்பு இரண்டாக பிரிக்கப்பட்டது. புதிதாக சேர்ந்த மாணவர்களோடு சேர்த்து 70 பேர் இருந்தோம். எங்கள் வகுப்பில் வெறும் ஆண்கள் மட்டுமே. எல்லோரும் பென்சில் (bench) அமர்ந்தோம். உயரம் பார்த்து தான் வகுப்பில் அனைவரும் அமரவைக்கப்பட்டார்கள். முன்னாடி அல்லது கடைசி பென்சில்  உட்கார்ந்தால் அடிக்கடி வாத்தியாரிடம் அடிவாங்க வேண்டுமென்பதால், எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி நடித்து நடு பென்சில் ஒரு இடம் பிடித்துவிட்டேன். ஒரு பென்சிற்கு 6 பேர். இக்கட்டாக இருக்கும். நெருக்கி நெருக்கி அமர்ந்திருப்போம்.

விதி யாரை விட்டது. வகுப்பை இரண்டாக பிரித்தும் நெரிசல் என்னை விட்டபாடில்லை. கிரிக்கெட் ஆடும்போது, படாத இடத்தில் டென்னிஸ் பந்துபட்டு எனக்கு வீங்கிவிட்டது. நானே நடக்க முடியாமல் நடந்து வந்து பொத்தினாற்போல அமர்ந்திருப்பேன். பென்சில் உள்ளவர்கள் அப்போதுதான் நெருக்கியடித்து இடித்துக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு நேரந்தான் தம்கட்டி இடிபடாமல் பார்ப்பது. அடிபட்ட விஷயத்தை சொல்லவும் முடியாது. சொன்னாலோ 'கைகொட்டிச் சிரிப்பார்கள் ஊரார்கள்'. இடியிலிருந்தும் தப்ப முடியாது. பேசாமல் எழுந்துபோய் தரையில் அமர்ந்துவிடுவேன்.

பள்ளி வகுப்புகளில் கிளாஸ் லீடர் என்றொரு பதவி உண்டு. கொஞ்சம் உயரமானவர்களைத் தான் கிளாஸ் லீடர்களாக நியமிப்பார்கள். கலை என்ற பெயரில் ஒரு பெண், உயரமாக இருப்பாள். நன்றாக படிப்பாள். லீடர் வேலை என்னவென்றால், சாக்பீஸ்-டஸ்டர் தினமும் கொண்டுபோய் கொண்டு வரவேண்டும். மாணவர்களிடம் பணம் சேகரித்து அனைவருக்கும் கட்டுரை நோட்டுப் புத்தகம், வெள்ளைத்தாட்கள் வாங்கி வந்து கொடுக்க வேண்டும் (இதில்  கடைக்காரரிடம் கொஞ்சம் கமிஷனும் கிடைக்கும்). வாத்தியார் இல்லாத சமயங்களில் பேசுவோர் பெயரை எழுதிவைக்க வேண்டும். அதை வாரம் ஒருமுறை வாத்தியார் பார்வையிடுவார். இதற்கென்று ஒரு நோட்டுப்புத்தகம் வேறு இருக்கும். நான் என் ஓட்டைவாயை வைத்துக் கொண்டு எப்போதும் சும்மா இருப்பதில்லை. பேசிக்கொண்டே இருப்பேன். தினமும் முதல் பெயராக என் பெயர் நோட்டுப்புத்தகத்தில் வந்துவிடும். நானும் இதெல்லாம் கண்டுகொள்வதாக இல்லை. பெயர் ஏற்கனவே எழுதிவிட்டாள் தானே என்று இன்னும் சத்தமாக பேசிக்கொண்டிருப்பேன். ஒருநாள் நோட்டு முருகேச வாத்தியாரிடம் போனது. கலையும் என்னைப் பற்றியும் என் பேச்சாற்றலை பற்றியும் விலாவாரியாக சொல்லிவிட்டாள். வாத்தியார் என்னைக் கூப்பிட்டார்.
வாத்தியார்: ஏன்டா! இப்படித்தான் வகுப்புல பேசிகிட்டே இருக்கியா!
நான்: இல்ல சார்! நான் ஒருமுறை தான் சார் பேசினேன்
கலை: இல்ல சார்! அவன் சொல்லச்சொல்ல பேசிட்ட இருந்தான் சார்!
நான்: இல்ல சார்! பொய் சார்!
வாத்தியார்: சரி! அடுத்தமுறை எத்தனை தடவை பேசுரானோ, அத்தனைமுறை அவன் பேரை எழுது.
கலை நோட்டை வாங்கிக் கொண்டு போய்விட்டாள்.
முருகேச வாத்தியார் என் தந்தையின் பால்ய நண்பர் என்பதால், எப்போதும் என்னை அடித்ததில்லை. "அறிவுகெட்டவனே! உங்கப்பனும் இப்படித்தான்" என்று செல்லமாக திட்டி அனுப்பிவிடுவார்.


மறுநாள்....
நான் வழக்கம்போல வாத்தியார் இல்லாத நேரம் தொனத் தொனவென பேசிக் கொண்டே இருந்தேன். இரண்டு நாள் இப்படியே போனது. மூன்றாவது நாள், நானும் என் பேச்சை துவங்கி இருந்தேன். சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் படத்தைப் பார்த்து எங்க தமிழ்வாத்தியார் பேசினால் எப்படி இருக்கும் என்று அவரைபோல பக்கத்தில் மாணவர்களிடம் செய்து காட்டிக் கொண்டிருந்தேன்.

கலை என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவள் வந்தவுடன் என் சேட்டை நிறுத்திவிட்டு அமைதியாகிவிட்டேன். வந்தவள் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டு "இரண்டு நாளாக உன்னுடைய பெயரை ராமஜெயம் எழுதுவது போல தினமும் எழுதிக்கொண்டிருக்கிறேன், உன் பேச்சை நிறுத்தவே மாட்டியா" சொன்னாள். எனக்கு அவள் சொன்னதில் என்ன தோணியதோ அடக்கமுடியாத சிரிப்பு. அவளும் சிரித்தவாறே போய்விட்டாள். அதன்பிறகு அவள் என்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதற்காக அசட்டுதனமாக எதாவது செய்துகொண்டு இருப்பேன். நண்பன் லோகேஷ் மட்டும் நக்கலாக கேட்பான் "ஏண்டா! அந்தப் பொண்ணு உயரம் என்ன. உன் உயரம் என்ன. உனக்கெல்லாம் இது தேவையா!".

முன்பே சொன்னது போல, ஏழாவதில் என்னை வேறு வகுப்பில் போட்டுவிட்டார்கள். பிறகு கலையிடம் நான் பேசியதே இல்லை, வெறும் சிரிப்போடு மட்டுமே எங்கள் நட்புணர்வு இருந்தது. சில வருடங்கள் கழிந்தது. பத்தாவது தேர்வு முடிந்து ப்ளஸ் ஒன் சேர்வதற்கான விண்ணப்பத்துடன் பள்ளி அலுவலகத்தின் முன் நின்றிருந்தேன். மற்ற மாணவ- மாணவியர்களும் நின்றிருந்தார்கள். மாணவிகள் எல்லோரும் ஒவ்வொருவராக விண்ணப்பத்தைக் கொடுத்துவிட்டு போகிறார்கள். எனக்கு கலையும் கணக்கு குருப் எடுத்து என்னோடு ஒரே வகுப்பில் படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் கலை மட்டும் கண்ணில் தென்படவில்லை. யோசித்து யோசித்து, தயங்கியவாறு தனலட்சுமியிடம் கேட்டேன் "கலை வரவில்லையா? வேறெதாவது பள்ளியில் சேரப்போகிறாளா?" என்று. "கலைக்கு திருமணமாகி பெங்களூர் போய்விட்டாள்" என்றாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது,

அப்போது புரியவில்லை நான் ஏன் அதிர்ச்சி ஆனேன் என்று. பிறகு புரிந்தது...

என்னமோ இது இன்பாங்களே! அதான்... அதான்பா...சே! அந்த...இது! ....ஆங்! இன்-பேக்-சிச்சுவேஷன்.

10 comments:

 1. கு.பி ,

  பெங்களூரில் வாடகை சைக்கிளில் ஒருத்தர் நியாபகம் வருதேனு பாடிக்கிட்டே திரியிறாரார்னு டூர்தர்ஷனில் காட்டினாங்க :-))

  # நீர் படிச்ச பள்ளிக்கூடம் வசதியான பள்ளிக்கூடம் போல இருக்கு ஏழாம் வகுப்பிலே பெஞ்சு கொடுத்திருக்கே, நாங்கலாம் எட்டாப்புல தான் பெஞ்சு பார்த்தோம் ,அது வரைக்கும் தரை டிக்கெட்டு தான் , தரையில குந்துறதுல என்ன பிரச்சினைனா காலை மடக்கி உட்காரும் போது கால் மரத்துவிடும் , டக்குனு எழுந்திருக்க வராது.

  எங்களுக்கு சன்னல் பிரச்சினைலாம் இல்லை பெரியஹால் , அதுல சுவரே இல்லாமல் வரிசையா கிளாஸ் நடக்கும் , ஹி...ஹி பக்கத்து கிளாஸ்ல இங்கிலீஷ் பாடம் படிப்பேன், இங்கே எங்கே தமிழய்யா அங்கே என்னடா பார்வைனு சாக்பீச வுட்டு அடிப்பாரு :-))

  ReplyDelete
  Replies
  1. //பெங்களூரில் வாடகை சைக்கிளில் ஒருத்தர் நியாபகம் வருதேனு பாடிக்கிட்டே திரியிறாரார்னு டூர்தர்ஷனில் காட்டினாங்க :-))//

   வெயிட் பண்ணுங்க. வேலூர் கூட காட்டுவாங்க.

   Delete
 2. கிரிக்கெட் அனுபவம்....... ஹி ............ ஹி ............ ஹி ............

  ReplyDelete
  Replies
  1. :) உங்களுக்கு டெடிகேட் பண்ண பாட்டை கேட்டிங்களா?

   Delete
 3. //...கிரிக்கெட் ஆடும்போது...//

  நான் புத்தக கிரிகெட்டு எல்லாம் ஆடியிருக்கேன். நீங்க ஆடியிருக்கீங்களா? page number இன் கடைசி digit தான் ஸ்கோர்.

  x2 = 2 runs
  x4 = 4 runs
  x6 = 6 runs
  x8 = 1 run
  x0 = Out

  ReplyDelete
  Replies
  1. ஆடி இருக்கேன். பழைய ஞாபகம். :)

   Delete
 4. விரல்ல என்ன குறியீடு ?? முதல்ல கொழப்பமாத்தான் இருந்தது... பின்னாடி புரிஞ்சிடுச்சு (உயரம் !!)
  என்னவோ ...இதும்பாய்ங்களே... ஹா..ஹா ( சின்ன வயசு ஞாபகம் எனக்கும் கிளப்பி விட்டுடீங்க !)

  ReplyDelete
 5. ஹாஹா:-))))

  கொசுவத்தின்னதும் நம்ம கொசுவத்தி இங்கே/

  சட்டாம்பிள்ளை

  http://thulasidhalam.blogspot.com/2008/08/blog-post_17.html

  ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய