Wednesday, May 16, 2007

தாங்கலடா சாமி


இடம்: கல்லூரி விடுதி
நேரம்: மாலை, 6:00 மணி
கதாபாத்திரங்கள்: ஆவி (எ) சங்கர், நெட்டை (எ) முருகேசு

ஆவி: டே நெட்டை! இங்க வாடா!
நெட்டை: என்னடா ஆவி!
(புலம்பி கொண்டே வருகிறான் நெட்டை)
நெ: என்னடா டோங்கு!
ஆ: டே மச்சான்! காதுசரியா கேட்கலடா!
நெ: எப்பபாரு பேசிட்டு இருக்க, உனக்கு வாய்பேசம போனா நல்லா இருக்கும்
ஆ: டே மாங்கா! மொக்கை போடதே. உண்மையா காது சரியா கேட்கலடா!
நெ: அதுக்கு என்ன இப்ப!
ஆ: டாக்டர்கிட்ட போகணும்.
நெ: சரி போகலாம்
ஆ: சைக்கிள் நீதாண்டா மிதிக்கணும்
நெ: அடப்பாவி! இதுக்குதான் என்னை கூப்பிட்டயா! சைக்கிளுக்கு ட்ரைவர் வச்சிட்டு இருக்கிற ஒரே ஆள் நீதாண்டா
(இருவரும் புறப்பட்டனர்)
ஆ: நல்லா மிதிடா! பாஸ்டா போடா!
நெ: நீ நல்ல நாலுபேரு சாப்பாடு சாப்பிட்டு உட்கார்ந்தா எப்படி மிதிக்கிறது. இங்க எனக்கு நுரை தள்ளிடும் போல இருக்குது. உனக்கு போய் ஆவினு பேரு வச்சான்பாரு அவனை அடிக்கனும், பார்க்கிறதுக்குதான் எலும்புகூடு மாதிரி இருக்கே, ஆனா பூதம் மாதிரி வெய்ட்டு.
ஆ: என்னடா சொன்னே. காது சரியா கேட்கலடா
நெ: இதுவேறயா! சரிதான்!
(டாக்டர் வீடு வந்ததும், சைக்கிளை நிறுத்திவிட்டு இருவரும் உள்ளே சென்றனர்)
ஆ: நெட்டை! பணம் கொண்டுவரலடா. நீ கொண்டுவந்தயா!
நெ: உன்கூட வந்தனே, என்ன!! உன்னை மாதிரி இம்சை பண்ணுறவனுகள காது ரெண்டு குபகுபனு சொல்ல குமுறுகஞ்சி காச்சணும். போ! போ! கொடுக்கிறேன். இல்லாட்டி நீ இன்னும் இம்சை கொடுப்ப!
(ஆவியும் நெட்டையும் டாக்டரின் அறை உள்ளே சென்றனர்)
டாக்டர்: உட்காருங்க!
டா: என்னப்பா பிரச்சனை!
ஆ: காது சரியா கேட்கல சார்!
டா: என்னப்பா பிரச்சனை!
ஆ: காது சரியா கேட்கல சார்!
டா: என்னப்பா பிரச்சனை! (சத்தமாக கூறுகிறார்)
ஆ: காது சரியா கேட்கல சார்!
டா: என்னப்பா பிரச்சனை! (இன்னும் சத்தமாக கூறுகிறார்)
ஆ: காது சரியா கேட்கல சார்!
டா: ஹலோ! என்னங்க பிரச்சனை! (கோபமாக)
நெ: சார்! அவனுக்கு அதுதான் பிரச்சனை! அவனுக்கு காது சரியா கேட்கல சார்!
டா: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...(ஆச்சர்யத்தில்)
டா: ஒரு சொட்டுமருந்து எழுதி தரேன். காதுல விடுங்க.
ஆ: எப்பெல்லாம் விடனும் சார்
டா: எப்ப விடனும்ங்கிறதவிட எங்க விடனும்ங்கிறதுதான் முக்கியம்
காதுல விடு (ஆவியும் நெட்டையும் தலைய சொறியராங்க) காலை 1முறை; மாலை 1முறை விடாதிங்க. நைட் மட்டும் விடுங்க போதும்.
(நம்ம மொக்கையவிட இது பெரிய மொக்கையா இருக்கும்போலனு, ஆவியும் நெட்டையும் காசு குடுத்துட்டு எஸ்கேப்!!!!!!!)

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆண்டனி: முபாரக் பாட்ஷா பாய்!!
பாட்ஷா: ஏ...ஏ...ஏ...ஆண்டவன் கெட்டவங்கல அதிகமா மொக்க போடுவான், சிரிக்க வைக்கமாட்டான்! ஆன நல்லவன்கல கொஞ்சமா மொக்கபோடுவான், சிரிக்கவச்சிடுவான்...

Tuesday, May 15, 2007

களம் கண்டேன்

காதல்களம் கண்டேன்

இளைப்பாற விடவில்லை!

இதழுடைந்த புன்னகையில்

போர்முரசு கொட்டி

இளக்கிவிட்டாய் மனதை

பருவ சாக்காட்டில்

பட்டறிவு ஏதுமின்றி

விழுப்புண் பெற்றுவிட்டேன்!

நிலைமை துறந்து

நெடுங்கனவை மறந்தேன்

உன்னினைவின் எச்சம்

கண்களில் கசிய

நின்னை சரணடைந்தேன்

Monday, May 14, 2007

திரைப்பார்வை - 1 (Sergio leone)


இந்தியபடங்கள் போல அல்லாமல் மேற்த்தியபடங்கள் காதல், நகைச்சுவை, அடிதடி, திகில் என வகையாக தயாராவது உண்டு. இவற்றில் 1960,70-களில் வந்த cowboy படங்களை ஒருவகையாக கொள்ளும் அளவிற்கு அனைத்து தரப்பினரையும் கவர்ந்தவை. திரைபடவுலகில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியவை. குறிப்பாக Sergio leone (ஆஸ்கார் விருது பெற்ற Benhur படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது) இயக்கிய Fistful of dollars, Few dollars more, Good bad and ugly, Once upon a time in west, My name is nobody போன்ற படங்கள் திரைவுலகத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தின. Sergio leone-ன் இப்படங்கள் வெளிவருவதற்கு முன் cowboy படத்தின் கதாநாயகர்கள் அழகாக காட்டபடுவார்கள். ஆனால் Sergio leone படங்களில் அனைவரும் அழுக்கு உடைகளுடனும் முரடர்களாகவும் இயல்பாகவும் காட்டபட்டார்கள். இப்படங்களுக்கு இசைஅமைத்தவர் Ennio morricone. இவரின் பின்னனிஇசை படத்திற்கு பெரும்பலம் சேர்த்தது (நிறைய தமிழ்ப்படங்களில் குதிரையில் கதாநாயகன் செல்லும்போது Good bad and ugly படத்தின் theme இசை வரும்).

இனி முதலாவதாக Fistful of dollars படத்தை பற்றி பார்ப்போம். இப்படம் Akiro kurosawa-வின் Yojimbo (the body guard) என்ற படத்தின் தழுவல் (அதற்காக இப்படத்தின் Akiro kurosawa வழக்கு தொடர்ந்தது வேறு கதை). கதாநாயகனாக நடித்த Clint eastwood-க்கு (unforgiven, mystic river, million dollar baby போன்ற படங்களை இயக்கி ஆஸ்கார் விருதுகள் பெற்றவர்) இப்படம் ஒரு திருப்புமுனை என்றே கூறலாம். கொள்ளைகாரர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் நிறைந்த ஒரு ஊருக்குள் கதாநாயகன் பிரவேசிப்பார். படத்தின் தொடக்கத்தில் சில முரடர்கள் ஒரு சிறுவனை விரட்டுதல், குதிரைமீது பிணம், கதாநாயகனை வம்பு செய்யும் கும்பல் என விறுவிறுப்பு் அதிகம் ஆகும். கதாநாயகன் ஒரு உணவுவிடுதி நடத்தும் முதியவர் மூலமாக, அந்த ஊர் கடத்தகாரர்கள் மற்றும் கொள்ளையர்களால் என இருவேறு கும்பல்களால் ஆளப்படுகிறது என்பதை அறிவான். இரு கும்பலுக்கும் இருக்கும் பகையைப் பயன்படுத்தி பகையை அதிகப்படுத்தவும், பணம் ஈட்டவும் முதலில் கதாநாயகன் முயற்சிப்பான். பிறகு நாயகனின் சூழ்ச்சி தெரியவர, கொள்ளையர்களால் அடித்துச் சின்னாபின்னாக்கப்பட்டு முதியவரால் காப்பாற்றப்படுவான். நாயகன் தப்பியதையடுத்து இருதரப்பிற்கும் ஏற்படும் மோதலின் இடையில், கடத்தல்காரர்கள் முற்ரிலும் அழிப்பட்டுவிடுவார்கள். நாயகன் இருக்கிமிடத்தைக் கேட்டு முதியவரை அடித்து சித்திரவதை செய்யப்படுவார். முடிவில் முதியவரைக் காப்பாற்ற வரும் நாயகன் கொள்ளையர்கள் அனைவரையும் அழிப்பதோடு படம் நிறைவு பெரும். கதாநாயகனும் வில்லனும் சந்திக்கும் இடங்கள் சிறப்பாக இருக்கும். குறிப்பாக, வில்லன் ஒரு மெக்ஸிகன் பழமொழி கூறுவார். “Winchester முன் pistol வைத்திருப்பவன் இறந்தவனுக்கு சமம்” (வில்லன் Winchester பயன்படுத்துபவர், கதாநாயகன் pistol பயன்படுத்துபவர்). இறுதிகாட்சியில் கதாநாயகன் இந்த பழமொழியை நினைவுபடுத்தி வில்லனுடன் மோதுவார். இந்த காட்சிஅமைப்பு மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். வில்லன் ஆட்கள் கதாநாயகனை அடித்து துன்புறுத்தும் காட்சிகள் வெகு இயல்பாக படமாக்கபட்டு இருக்கும்.

கதாநாயகன் clint eastwood-ன் நடை, உடை, பாவனை அனைத்தும் மறக்கமுடியாதவை. அவருடைய ஆளுமையோடு கூடிய நடிப்பு அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்த ஒன்று ("இன்றைய சூப்பர் ஸ்டார்கள் இவரது ஸ்டைலைத்தான் காப்பி அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்?" என்று எண்ணத் தோன்றும்). இப்படம் கதைக் களத்திற்கு ஏற்ப அருமையான முறையில் தழுவல் செய்யப்பட்டு இருக்கும். இப்படத்திற்கு இசையமைத்த எனியோ மொரிகான் பின்னணி இசையில் ஒலிக்கும் ஸ்பானிய கிட்டார்கள் திரைப்படத்தின் கதையோடு குதிரை வேகத்தில் பயணிக்கும். மறுபடியும் ஹாலிவுட்டில் கூட எடுக்கமுடியாத அளவிற்கு அமைந்த இப்படத்தை இத்தாலியில் தான் உருவாக்கினார்கள்.

(தொடரும்)