Saturday, May 19, 2007

இந்தியப்பெண்ணிற்கு விழிப்புண்ர்வு அவசியம்


பெண்கள் முன்னேற்றம் என்றால் என்ன? இந்திய சமுதாயத்தில் பெண்களின் முன்னேற்றம் எவ்வாறு உள்ளது? இது போன்ற கேள்விகள் நம்மிடையே தோன்றுவதுண்டு. இந்தியாவில் பெண்கள் முன்னேற்றத்தில் மூன்று பரிமாணம் உள்ளது. அவை படிப்பு, குடும்பம் மற்றும் சமூகம். இத்தகைய முன்னேற்றத்திற்கு தடைக்கல் படிப்பு, குடும்பம், சமூகம் சார்ந்த கொடுமைகள். இன்றைய சூழலில் பல பெண்கள் படித்திருந்தும் வேலையிலிருந்தும் சமூக விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். சமூகத்தில் படிப்பறிவை தவிர்த்து குடும்பமும் குடும்பம் சார்ந்த சமூக அறிவும் அவசியம் பெண்களுக்குத் தேவை. பெரும்பாலும் இந்தியவிலுள்ள தாய்மார்கள் குடும்பத்தையும் பிள்ளைகளையும் பொறுப்புடன் பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் குடும்ப தந்தையின் பொறுப்பின்மையாகவும் இருக்கலாம். (என்னுடைய பார்வையில், இதனால் தான் இந்தியாவில் அதிகப்படியானோர் தந்தையைவிட தாயைத்தான் அதிகமாக நேசிக்கிறார்கள்). ஆகவே இன்னிலை மாற குடும்ப பராமரிப்பிற்கு ஆண்களின் பங்கு அவசியம். குடும்ப பிரச்சனைகளில் வரதட்சனைகொடுமை தலையாயது. 1997-ல் எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி ஆண்டிற்கு 5000 பெண்கள் வரதட்சனை கொல்லப்படுகிறார்கள். 1985-லேயே சட்டங்கள் இயற்றப்பட்டும் பயனில்லாமல் இருப்பது போல தோன்றுகிறது. ஒரு பெண் படித்து, வேலையில் இருந்தால் குடும்ப சூழ்னிலை சீராக அமைய வாய்ப்புகள் இருக்கிறது.
ஆனால் சமூகவலையில் இந்திய பெண்கள் படும் இன்னல்கள் சொல்லில் அடங்காது. 2000ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி இந்தியாவில் 1மணிநேரத்திற்கு ஒரு பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதுகூட குறைவான புள்ளிவிவரமா? என்பது என் சந்தேகம். இதுபோன்ற குற்றங்கள் பற்றி யாரும் சரியாக புகார் செய்வதில்லையா? இதுபோன்ற கொடுமைகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப் படுகிறதா? என்பதே கேள்விகள். மேலை நாடுகளில் கணவன் வன்புணர்ச்சியில் ஈடுபட்டால் கூட மனைவியர் புகார் கொடுக்கிறார்கள். ஆனால் இங்கே சட்டம் இருந்தும் கூட சமூகத்திற்கு பயப்படும் நிலையில் தான் நம் பெண்டிர் உள்ளனர். இத்தகைய சூழ்னிலையில் 1. சட்டம் இளகுவான சீரான ஒத்துழைப்பை தரவேண்டும், 2. பெண்கள் இத்தகைய சீர்கேடு நடவாமல் தடுக்க முன்வந்து தங்கள் புகார்களை பதிவு செய்யவேண்டும், 3. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க படவேண்டும். இக்காலத்தில் வன்புணர்ச்சிகள் அதிகமாவதர்க்கு முக்கிய காரணியாக ஆபாச படங்களையே குறிப்பிடுகிறார்கள். அதைவிட முக்கியம் முறையான பாலியல்கல்வி. பெண்குழந்தைகளுக்கு நேரும் பாலியல் கொடுமைகள் கூட முறையான பாலியல் கல்வி மூலம் தவிர்க்கலாம். இரண்டாவதாக குறிப்பிடப்படவேண்டியவை வேலையிடத்தில் நிகழும் பாலியல் தொல்லைகள். சில வருடத்திற்குமுன் தொலைக்காட்சி நிலையங்களில் நேரும் பாலியல் தொல்லைகள் பற்றியும், அங்கே அதிகாரிகளாக பணிபுரியும் கிழடுகள் ஜொள்ளுவதையும் கிழித்திருந்தார்கள். இதிலே கொடுமை என்னவென்றால், வேலை போகக்கூடதென்று பாதிக்கப்பட்ட பெண்கள் தனக்கு நடக்கும் தொந்தரவுகளை தாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இவற்றை தடுக்க மேலே கூறிய அனைத்து முயற்சிகள் பொருந்தும்.

முடிவாக, சமுதாயத்தில் மேன்மை பெற முதலில் மகளிருக்கு தன்மானம் விழிப்புண்ர்வு தேவை. தனக்கு நேரும் கொடுமைகளைக்கண்டும் பொறுத்துக்கொண்டும் சும்மா இருக்கக்கூடாது. சட்டத்தின்முன் கொடுமைக்காரர்களின் முகமூடியை கிழிக்கவேண்டும். அப்படிச்செய்யாவிடில், விட்டில் பூச்சி போல தினம்தினம் நெருப்பை நோக்கிய மரணம் தான்.

Wednesday, May 16, 2007

திரைப்பார்வை - 2 (Sergio Leone)

திரைப்பார்வையில் நாம் அடுத்ததாக பார்க்கவிருப்பது, Sergio leone-ன் A few dollars more என்ற திரைப்படம். இந்த படத்திலும் Clint eastwood மற்றும் Gian maria முறையே கதாநாயகன் மற்றும் வில்லன் வேடத்தில் நடித்து இருந்தனர். இப்படத்தின் இன்னொரு நாயகனாக Lee van cleef நடித்து இருந்தார். படத்தின் முதல்காட்சி முதல் இறுதிக்காட்சி வரை படம் விறுவிறுப்பாக இருக்கும். Clint eastwood மற்றும் Lee van cleef இருவரும் bounty killer-கள்(பணயபணத்திற்காக கொள்ளையர்களை கொல்வதை தொழிலாக உடையவர்கள்). Lee van cleef தன் தங்கையின் குடும்பத்தை அழித்த Gian maria-ஐ பழிவாங்க காத்துக்கொண்டு இருப்பவர். Gian maria-வின் கொள்ளைகும்பலுக்கு அரசு அதிகபணயத்தொகை அறிவித்து இருக்கும். Gian maria வருகையை எதிர்பார்த்து elpaso நகரில் Clint eastwood மற்றும் Lee van cleef காத்திருப்பார்கள். ஆனால் சந்தர்ப்பவசமாக கொள்ளையர்கள் தப்பிவிடுவார்கள். பிறகு இருவரும் கொள்ளையர்களை தொடர்ந்து சென்று அழிப்பதே இறுதிக்காட்சி.

Sergio leone-ன் எல்லாப்படங்களிலும் வசனம் இல்லாமல் சில காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கும். இப்படத்திலும் அதுபோன்ற காட்சிகள் உண்டு. ஒரு சிறந்த இயக்குனர் கதையை நாடகபாணிவசனம் இல்லாமல் காட்சியைக்கொண்டு உணர்த்துதல் வேண்டும். எடுத்துகாட்டாக பாலசந்தரின் நாடகபாணி காட்சியமைப்பும், பாரதிராஜாவின் காட்சியின் மூலம் கருத்தும் கூறலாம். இவ்விஷயங்களில் Sergio leone கைதேர்ந்தவர். இப்படத்தில் கொள்ளையர் Elpaso நகரில் திருடும் போது வசனம் இல்லாமல் சுமார் 10 நிமிடம் படமாக்கப்பட்டு இருக்கும் (இதுபோன்ற வசனமில்லாக் காட்சியமைப்பு once upon a time west படத்தில் உச்சத்தை எட்டியிருக்கும்). படத்தின் முதல் 15-20 நிமிடம் வசனமில்லாக்காட்சிகள் தான், வெகு நேர்த்தியானவை. கொள்ளையர்களை நகரினுள் வரவழைக்க தங்கள் திட்டத்தை செயல்படுத்தும் பொது, பின்னணியில் ennio morricone காட்சிகளுக்கு தன் இசை மூலம் உயிர் கொடுத்திருப்பார்.



Sergio leone-ன் 90% படங்கள் அகில உலக திரைபட பட்டியலில் முதல் 50-க்குள் வந்துவிடுகின்றன. 1966-ல் வெளியிடப்பட்டு திரை உலகில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய படம் the good, the bad, and the ugly. Clint eastwood, Leevan cleef, மற்றும் Eli wallach சேர்ந்து இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஒரு சுடுகாட்டில் இருக்கும் புதையலைத்தேடி அலையும் மூவருக்குள் சுற்றிசுழலும் திரைக்கதை. Leevan cleef இப்படத்தில் வில்லன்வேடம் ஏற்றிருப்பார். Eli wallach தன் நகைசுவை நடிப்பால் அசத்தியிருப்பார். அவர் செய்யும் கோமாளிதனங்கள் எல்லாம் வெகு இயல்பாக அமைந்திருக்கும். Herosim என்ற பெயரில் கேலிகூத்தாக ஜல்லியடிக்கும் இந்தியதிரைப்படங்கள் போல் அல்லாமல், Clint eastwood-ன் ஸ்டைல் படத்திற்கு ஒரு பலம்.

(தொடரும்)

கடவுள் மறுப்பா? பகுத்தறிவா?

கடவுள்மறுப்புக்கொள்கை எதோ இன்று தோன்றியது அல்ல. கடவுள்மறுப்புக்கொள்கைகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மனிதர்களால் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக கடந்தநூற்றாண்டில் அம்பேத்கார், பெரியார் போன்றோர்கள் இந்தியாவில் கடவுள்மறுப்புகொள்கைகளை பெரிதும் உறுதிபடுத்தினர். மார்க்ஸிய தத்துவமும் கம்யுனிசமும் கடவுள்மறுப்புகொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. டார்வினின் பரிணாம வளர்ச்சித்தத்துவம் கடவுள்மறுப்பை மேலும் உறுதிபடுத்தியது. புத்தர் மற்றும் சக்கிரடிஸ்-ன் தத்துவங்கள் கடவுள் மற்றும் கடவுள் சார்ந்த சாத்திரங்களை எதிர்த்தன.

பொதுவாக, கடவுள்மறுப்பும் பகுத்தறிவும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை. ஆனால் பகுத்தறிவு முழுமையாக செயல்படாவிட்டால், கடவுள்மறுப்பு நிச்சயமாக நீர்த்துவிடும். உதரணத்திற்கு, கடவுளை மறுத்த புத்தரை கடவுளாக பாவிக்கும்தன்மை, அந்த சித்தாந்தம் நீர்த்ததன் விளைவு. எனவே கடவுள்மறுப்பைவிட, பகுத்தறிவே ஒரு சித்தாந்ததில் முதன்மை இடம் பெற வேண்டும். ரஷ்யாவில் மார்க்ஸ்ய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கம்யுனிச ஆட்சியில் கடவுள் மற்றும் மதங்கள் முற்றிலும் மறுக்கப்பட்டன. இவை பகுத்தறிவால் தோன்றியவை அல்ல. சட்டதினால் மாற்றப்பட்டவை. எனவே இவை காலப்போக்கில் செயலளவில் பலகீனம் அடைந்தன.

எனவே ஒரு மனிதன் கண்மூடித்தனமாக கடவுளை பின்பற்றுவதாலும், கடவுளை மறுப்பதாலும் ஒரு பயனும் இல்லை. எவன் ஒருவன் தன் பகுத்தறிவின் மூலம் உணர்கின்றானோ அவனே அப்பாதையில் செழுமை அடையமுடியும். கடவுள் மறுப்பு விட கடவுள் நம்பிக்கையை ஆதரிப்போர் அதிகம் ஆகவே கடவுள் நம்பிக்கை பற்றி நம்மக்களிடையே தோன்றும் சில கேள்விகளை பற்றி அலசுவோம்.

1. கடவுள்னம்பிக்கை ஒருவனை செம்மைபடுத்துகிறதா?
முற்றிலும் இல்லை, இன்றைய காலகட்டத்தில் தவறு (கொலை, கொள்ளை...) செய்பவர்களில் அதிகமானோர் இறைனம்பிக்கை உடையோர்தான். கண்மூடித்தனமான கடவுள் நம்பிக்கை ஒருவனை முட்டாள் ஆக்குகிறது. ஆகவே பகுத்தறிவு இங்கு முக்கியம். எடுத்துகாட்டாக இந்தியாவில் சென்ற தோன்றிய முக்கிய பிரச்சனைகள் (மசூதி இடிப்பு, பம்பாய் குண்டுவெடிப்பு) எல்லாம் மத அடிப்படையில் உண்டானவை.

2. குழந்தைகளுக்கு பகுத்தறிவு என்றால் புரியுமா?
இது ஒரு வரட்டுவாதம். மதம், கடவுள் என்றால் மட்டும் குழந்தைகளுக்கு புரியப் போகிறதா? நிச்சயமாக இல்லை. பொதுவாகவே, குழந்தைகள் பகுத்தறிவுவாதிகள்தான். ஏன்னென்றால், அவர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் காரணங்களை ஆராய்வார்கள். ஆனால் நாமோ, அவர்களை பயமுறுத்தி கேள்விகளை தவிர்ப்போம். இது ஆரோக்கியமானது அல்ல. முதலில் பகுத்தறிவோடு கூடிய கருத்துக்களை அவர்களின் மனதில் பதிக்க வேண்டும். முடிந்தவரை கண்மூடித்தனமாக அவர்களை எதையும் செய்ய பயிற்ச்சிக்க கூடாது.

3. கடவுள்னம்பிக்கையால் லாபம் என்ன?
எனக்கு தெரிந்து நட்டம் தான் அதிகம். அது திருப்பதி ஆகட்டும், சபரிமலை ஆகட்டும், வாடிகன் ஆகட்டும், மக்கா ஆகட்டும். பணவிரயம் தான் கடவுளால் மிஞ்சுகிறது. நம்மக்கள் இங்கே நிம்மதியை விட்டுவிட்டு வேறெதயோ தேடிக்கொண்டு இருக்கிறார்கள். “மதம் மலர்களால் மறைக்கப்பட்ட விலங்கு” என்று மார்க்ஸ் கூறினார். மதம் மாறுவதால் மட்டும் மனிதநேயம் தழைத்துவிடாது என்பது. மார்க்ஸின் உறுதியான கொள்கை. எந்த மதமானலும் பகுத்தறிவுக் கருவியின் பயன் கொள்ளவேண்டும்.

4. எதோ ஒரு ஆற்றல் இந்த பிரபஞ்சத்தை செயல்படுத்துகிறதா?
செயல்படுத்தட்டும். அப்படி ஒரு ஆற்றல் இருந்தால் இருந்து விட்டுப்போகட்டும். நாம் அதை நம்புவதாலோ (அ) பூஜிப்பதாலோ, அது இயற்கை பிரச்சனையில் இருந்து காப்பாற்றிவிடப்போவதில்லை. அப்படி காப்பாற்றும் என்று நம்பினால், அதுவே உலகமகா மூடத்தனம். நம்முடைய தேவை 1. மக்கள் நன்மை மற்றும் 2. தேவையில்லாத பிரச்சனைகளை அகற்றுவது.

5. நன்மைசெய்வோர் கடவுளா?
இன்று நம்மக்கள் எந்த கடவுளை சொல்லி அடித்துக்கொள்கிறார்களோ, அவர்கள் எல்லாரும் முந்தைய காலங்களில் தத்துவஞானிகளாக (யேசு, முகமதுநபி, புத்தர், மகாவீரர்), அரசர்களாக (ராமர், கிருஷ்ணர்), மக்களுக்காக உயிர்நீத்த வீரர்கள் (கிராம கடவுள்கள்) இருந்தவர்கள். எனவே ஒரு மனிதனை கடவுளாக்குவதும் பிரச்சனையின் அடிப்படை.

‘கடவுளால் எல்லாம் நடைபெறுகிறது’ என்று சூழ்நிலைக்கைதியாகமல், மக்களின் நன்மைக்குரிய காரியங்களில் ஈடுபடவேண்டும். கடவுள் மறுப்போ அல்லது பகுத்தறிவோ என்பதன் காரியம் மக்களின் நலனாக இருக்கவேண்டும். வெறும் பேச்சளவில் இல்லாமல் செயலவில் இருக்கவேண்டும். “இன்று நான் கூறுவது, நாளைய சமுதாயத்திற்கு பொருந்தாமல் போகலாம். நான் கூறியவை தவறாகவும் இருக்கலாம், ஆதலால் நான் கூறியவற்றை பகுத்தறிவு கொண்டு சிந்தனை செய்து முடிவெடுக்க வேண்டுங்கள்” என்று சாக்கிரடிஸ் கூறினார். அதுபோல ஒவ்வொறு மனிதனும் கடவுள், மதம், மதசாத்திரங்களை தூக்கியெறிந்து பகுத்தறிவுடன் வாழ்ந்து உலகம் வளம் பெற மனிதநேயம் தழைத்தோங்க வாழவேண்டும்.

என்னுடைய கருத்துகளை யாரும் தவறாக கொள்ளவேண்டாம். இந்த கருத்துகள் யாரையும் யாருடைய மத நம்பிக்கையை புண்படுத்தும் நோக்கம் அல்ல. தங்களுடைய சிறந்த கருத்துகளை விவாதத்திற்கு கொண்டு வரலாம். வாழ்த்துக்கள்.