Wednesday, May 16, 2007

கடவுள் மறுப்பா? பகுத்தறிவா?

கடவுள்மறுப்புக்கொள்கை எதோ இன்று தோன்றியது அல்ல. கடவுள்மறுப்புக்கொள்கைகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மனிதர்களால் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக கடந்தநூற்றாண்டில் அம்பேத்கார், பெரியார் போன்றோர்கள் இந்தியாவில் கடவுள்மறுப்புகொள்கைகளை பெரிதும் உறுதிபடுத்தினர். மார்க்ஸிய தத்துவமும் கம்யுனிசமும் கடவுள்மறுப்புகொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. டார்வினின் பரிணாம வளர்ச்சித்தத்துவம் கடவுள்மறுப்பை மேலும் உறுதிபடுத்தியது. புத்தர் மற்றும் சக்கிரடிஸ்-ன் தத்துவங்கள் கடவுள் மற்றும் கடவுள் சார்ந்த சாத்திரங்களை எதிர்த்தன.

பொதுவாக, கடவுள்மறுப்பும் பகுத்தறிவும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை. ஆனால் பகுத்தறிவு முழுமையாக செயல்படாவிட்டால், கடவுள்மறுப்பு நிச்சயமாக நீர்த்துவிடும். உதரணத்திற்கு, கடவுளை மறுத்த புத்தரை கடவுளாக பாவிக்கும்தன்மை, அந்த சித்தாந்தம் நீர்த்ததன் விளைவு. எனவே கடவுள்மறுப்பைவிட, பகுத்தறிவே ஒரு சித்தாந்ததில் முதன்மை இடம் பெற வேண்டும். ரஷ்யாவில் மார்க்ஸ்ய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கம்யுனிச ஆட்சியில் கடவுள் மற்றும் மதங்கள் முற்றிலும் மறுக்கப்பட்டன. இவை பகுத்தறிவால் தோன்றியவை அல்ல. சட்டதினால் மாற்றப்பட்டவை. எனவே இவை காலப்போக்கில் செயலளவில் பலகீனம் அடைந்தன.

எனவே ஒரு மனிதன் கண்மூடித்தனமாக கடவுளை பின்பற்றுவதாலும், கடவுளை மறுப்பதாலும் ஒரு பயனும் இல்லை. எவன் ஒருவன் தன் பகுத்தறிவின் மூலம் உணர்கின்றானோ அவனே அப்பாதையில் செழுமை அடையமுடியும். கடவுள் மறுப்பு விட கடவுள் நம்பிக்கையை ஆதரிப்போர் அதிகம் ஆகவே கடவுள் நம்பிக்கை பற்றி நம்மக்களிடையே தோன்றும் சில கேள்விகளை பற்றி அலசுவோம்.

1. கடவுள்னம்பிக்கை ஒருவனை செம்மைபடுத்துகிறதா?
முற்றிலும் இல்லை, இன்றைய காலகட்டத்தில் தவறு (கொலை, கொள்ளை...) செய்பவர்களில் அதிகமானோர் இறைனம்பிக்கை உடையோர்தான். கண்மூடித்தனமான கடவுள் நம்பிக்கை ஒருவனை முட்டாள் ஆக்குகிறது. ஆகவே பகுத்தறிவு இங்கு முக்கியம். எடுத்துகாட்டாக இந்தியாவில் சென்ற தோன்றிய முக்கிய பிரச்சனைகள் (மசூதி இடிப்பு, பம்பாய் குண்டுவெடிப்பு) எல்லாம் மத அடிப்படையில் உண்டானவை.

2. குழந்தைகளுக்கு பகுத்தறிவு என்றால் புரியுமா?
இது ஒரு வரட்டுவாதம். மதம், கடவுள் என்றால் மட்டும் குழந்தைகளுக்கு புரியப் போகிறதா? நிச்சயமாக இல்லை. பொதுவாகவே, குழந்தைகள் பகுத்தறிவுவாதிகள்தான். ஏன்னென்றால், அவர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் காரணங்களை ஆராய்வார்கள். ஆனால் நாமோ, அவர்களை பயமுறுத்தி கேள்விகளை தவிர்ப்போம். இது ஆரோக்கியமானது அல்ல. முதலில் பகுத்தறிவோடு கூடிய கருத்துக்களை அவர்களின் மனதில் பதிக்க வேண்டும். முடிந்தவரை கண்மூடித்தனமாக அவர்களை எதையும் செய்ய பயிற்ச்சிக்க கூடாது.

3. கடவுள்னம்பிக்கையால் லாபம் என்ன?
எனக்கு தெரிந்து நட்டம் தான் அதிகம். அது திருப்பதி ஆகட்டும், சபரிமலை ஆகட்டும், வாடிகன் ஆகட்டும், மக்கா ஆகட்டும். பணவிரயம் தான் கடவுளால் மிஞ்சுகிறது. நம்மக்கள் இங்கே நிம்மதியை விட்டுவிட்டு வேறெதயோ தேடிக்கொண்டு இருக்கிறார்கள். “மதம் மலர்களால் மறைக்கப்பட்ட விலங்கு” என்று மார்க்ஸ் கூறினார். மதம் மாறுவதால் மட்டும் மனிதநேயம் தழைத்துவிடாது என்பது. மார்க்ஸின் உறுதியான கொள்கை. எந்த மதமானலும் பகுத்தறிவுக் கருவியின் பயன் கொள்ளவேண்டும்.

4. எதோ ஒரு ஆற்றல் இந்த பிரபஞ்சத்தை செயல்படுத்துகிறதா?
செயல்படுத்தட்டும். அப்படி ஒரு ஆற்றல் இருந்தால் இருந்து விட்டுப்போகட்டும். நாம் அதை நம்புவதாலோ (அ) பூஜிப்பதாலோ, அது இயற்கை பிரச்சனையில் இருந்து காப்பாற்றிவிடப்போவதில்லை. அப்படி காப்பாற்றும் என்று நம்பினால், அதுவே உலகமகா மூடத்தனம். நம்முடைய தேவை 1. மக்கள் நன்மை மற்றும் 2. தேவையில்லாத பிரச்சனைகளை அகற்றுவது.

5. நன்மைசெய்வோர் கடவுளா?
இன்று நம்மக்கள் எந்த கடவுளை சொல்லி அடித்துக்கொள்கிறார்களோ, அவர்கள் எல்லாரும் முந்தைய காலங்களில் தத்துவஞானிகளாக (யேசு, முகமதுநபி, புத்தர், மகாவீரர்), அரசர்களாக (ராமர், கிருஷ்ணர்), மக்களுக்காக உயிர்நீத்த வீரர்கள் (கிராம கடவுள்கள்) இருந்தவர்கள். எனவே ஒரு மனிதனை கடவுளாக்குவதும் பிரச்சனையின் அடிப்படை.

‘கடவுளால் எல்லாம் நடைபெறுகிறது’ என்று சூழ்நிலைக்கைதியாகமல், மக்களின் நன்மைக்குரிய காரியங்களில் ஈடுபடவேண்டும். கடவுள் மறுப்போ அல்லது பகுத்தறிவோ என்பதன் காரியம் மக்களின் நலனாக இருக்கவேண்டும். வெறும் பேச்சளவில் இல்லாமல் செயலவில் இருக்கவேண்டும். “இன்று நான் கூறுவது, நாளைய சமுதாயத்திற்கு பொருந்தாமல் போகலாம். நான் கூறியவை தவறாகவும் இருக்கலாம், ஆதலால் நான் கூறியவற்றை பகுத்தறிவு கொண்டு சிந்தனை செய்து முடிவெடுக்க வேண்டுங்கள்” என்று சாக்கிரடிஸ் கூறினார். அதுபோல ஒவ்வொறு மனிதனும் கடவுள், மதம், மதசாத்திரங்களை தூக்கியெறிந்து பகுத்தறிவுடன் வாழ்ந்து உலகம் வளம் பெற மனிதநேயம் தழைத்தோங்க வாழவேண்டும்.

என்னுடைய கருத்துகளை யாரும் தவறாக கொள்ளவேண்டாம். இந்த கருத்துகள் யாரையும் யாருடைய மத நம்பிக்கையை புண்படுத்தும் நோக்கம் அல்ல. தங்களுடைய சிறந்த கருத்துகளை விவாதத்திற்கு கொண்டு வரலாம். வாழ்த்துக்கள்.

26 comments:

 1. நல்ல சில கருத்துக்கள். குறிப்பா இயற்கை ஒரு சக்தியால இயங்குதுன்னா இயங்கிட்டுப் போகட்டுமேன்னு சொன்னீங்கபாருங்க. நல்லாயிருந்துச்சு.

  கடவுள்நம்பிக்கை உள்ளவர்கள்தான் அதிகம் குற்றம் செய்யுறாங்க என்கிறது சரியான வாதமா தெரியல நம்ம தினகரன் கருத்துக்கணிப்பாட்டம் இருக்குது.

  கடவுள் மறுப்பாளர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் குற்றங்கள் நடப்பதில்லையா?

  க. நம்பிக்கையுடையவர்கள் அதிக அளவில் இருப்பதால் அவர்களில் குற்றம் புரிவோர்களும் அதிகமா இருக்கிறாங்க.

  Your statement is a statistical fallacy.

  சிந்தனைகளைத் தொடருங்க

  ReplyDelete
 2. திரு. சிறில் அலெக்ஸ்,
  தங்கள் பின்னோட்டத்திற்கும் விமர்சனத்திற்கும் நன்றி.
  கடவுள்னம்பிக்கையுள்ளோர் தவறுசெய்கிறார்கள் என்று நான் கூறவில்லை.ஆனால் உலகில் சுமார் 95% கடவுள்நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கிறார்கள் (http://www.positiveatheism.org/writ/martin.htm). ஆகவே தவறு செய்பவர்களில் அதிகமானோர் கடவுள்னம்பிக்கையுள்ளவராக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இதுவே என் வாதம்.

  கடவுள்னம்பிக்கை ஒருவனை செம்மைபடுத்துகிறதா?
  என்ற வாதத்திற்கு எதிர்வாதம் தான் இது.

  ReplyDelete
 3. //உலகில் சுமார் 95% கடவுள்நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கிறார்கள் (http://www.positiveatheism.org/writ/martin.htm). ஆகவே தவறு செய்பவர்களில் அதிகமானோர் கடவுள்னம்பிக்கையுள்ளவராக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்//

  உங்கள் வாதத்தின் படி பார்த்தால்... உலகில் தவறு செய்யாது இருப்பவர்களும் கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவே இருப்பார்கள் நண்பரே.

  கடவுள் நம்பிக்கை ஒருவரை நல்ல வழியில் செலுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, அது அவரை வெறியனாகவோ, ஜதார்த்த வாழ்வைப் பார்க முடியாதவனாகவோ செய்து விடக்கூடது என்பதே எனது எண்ணம்.

  அண்மையில் ஒரு புத்தகம் வாசித்தேன், அது ஜேசு பற்றியது, அதில் ஜேசு மேரி மக்டிலனை திருமணம் செய்தார் அவரிற்கு குழந்தைகள் கூட உண்டு என நிரூபிக்கின்றது. ஜெசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்தார் என்பது பொய், அவர் அக் கால கட்டத்தில் இறக்கவில்லை... பைபிளில் கூறப்படுவதற்கும் பின்பு பல ஆண்டுகளின் பின்பே அவர் இறந்தார் எனவும் மற்றும் பல விடயங்களும் அத்தாட்சிகளுடன் நிரூபணமாக எழுதி இருந்தார்கள்.

  இதனை நான் எனது கிறிஸ்தவ நண்பர் ஒருவருடன் பேசிய பொழுது, அவன் கூறினான் "அவர் உயிர்த்து எழுந்திருந்தால் என்ன, எழாமல் இருந்தால் என்ன... மொத்தத்தில் பைபிள் நமக்கு நல்லவற்றையே போதிக்கின்றது, அவ்வாறே மற்றைய சமய நூல்களும் நல்லவற்றையே போதித்து, நல்லவற்றையே செய்யுமாறு கூறுகின்றன..."

  ஆனால் சிலர் கண் மூடித்தனமாக இருந்து, தாம் செய்யும் கொலைகள் கொள்ளைகளுக்கும் கடவுளின் நாமத்தின் பெயரில் தாம் அதனைச் செய்வதாகக் கூறுகிறார்கள்... ஆனால் எந்த ஒரு மதத்தினை நாம் எடுத்துக் கொண்டாலும் கடவுளின் வாசகங்களிலே... அனைவரிடமும் அன்பு காட்டும் படியே கூறப்பட்டுள்ளது.

  ஆகவே மதங்கள் அன்பையும், பண்பையும், அகிம்சையையுமே போதிக்கின்றன... ஆனால் சில மனிதர் மதங் கொண்ட மனிதராகி அவர்களுடைய மதத்தின் பெயரினை மதங் கொண்ட யானையிலும் விடக் கேவலமாக்கி விடுகின்றான்

  ReplyDelete
 4. haran,
  உண்மைதான். அனைத்து மதங்களிலும் நல்ல கருத்துக்கள்தான் கூறப்பட்டுள்ளது.ஆனால் அதன்படி செம்மையாக வழி நடப்பவர்கள் குறைவு.இதற்கு காரணம் கண்மூடித்தனமான மதநம்பிக்கை.எடுத்துகாட்டாக,சூரியனை பூமி சுற்றுகிறது என்று கலீலியோ கூறிய போது, பைபிளுக்கு எதிரான கருத்து என்று அவருக்கு தண்டனை விதித்தார்கள்.

  ReplyDelete
 5. குட்டி பிசாசு நல்ல கருத்துக்கள். வரவேற்கிறேன். தமிழ்ச் சூழலில் பகுத்தறிவு என்று பேசும் போது, அது வறட்டுத்தனமான கடவுள் மறுப்பாகவே கருதப்படுகிறது. ஏனெனில் பெரியாரின் பகுத்தறிவுவாதம், இந்துக் கடவுள் முதுற்கொண்டு அனைத்து மதக் கடவுளர்களையும் காட்டுக் கூச்சலோடு தாக்கியது எதிர் வினையைத்தான் உண்டாக்கியதே தவிர, உண்மையான மறுமலர்ச்சி ஏற்படவில்லை தமிழகத்தில்.

  கம்யூனிசத்தை பொறுத்தவரை எந்த ஒரு கருத்தும் அது தோன்றிய சூழலை ஒழிக்காதவரை அது நீடித்துக் கொண்டேயிருக்கும் என்பது அடிப்படை. எனவே, உலகில் வறுமைக்கும், சுரண்டல், மக்களின் வாழ்க்கை பாதுகாப்பு போன்ற விஷயங்களுக்கு தீர்வு காணப்படாத வரை மக்கள் மதம் என்கின்ற மந்திர சக்திக்கு அடிமைப்பட்டேயிருப்பர்.

  எனவே, மதம் - கடவுள் போன்ற கருத்துக்களை ஒழிக்க வேண்டும் என்று விரும்பு ஒருவர், முதலில் செய்ய வேண்டியது ஏற்றத்தாழ்வான இந்த சமூகத்தை மாற்றியமைப்பதற்காக தன்னால் இயன்ற சேவையை செய்வதுதான் முதல் வழி. அத்தோடு கடவுள் மறுப்பு அல்லது எதிர்பு என்று கூறுவதைவிட, இந்த உலகத்தை - பிரபஞ்சத்தின் இயக்கத்தை அறிந்து கொள்வது என்று வாதிடலாம். அதாவது, உலகைப் பற்றிய விஞ்ஞான கண்ணோட்டத்தை படிப்படியாக அறிந்து கொள்வதன் மூலம் கடவுள் நம்பிக்கையிலிருந்து விடுபட உதவிடும்.

  நான் விவேகானந்தா ஆங்கிலப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, கணேசன் மா°டர் என ஒருவர் இருந்தார். அவர் மிக திறமையானவர்; தன்னுடைய கருத்துக்களை கதைகள் மூலமாக மாணவர்களுக்கு புகுத்தி விடுவார். அவர் பாடம் எடுப்பதைவிட இந்து மதம் சம்பந்தப்பட்ட கருத்துக்களை புகுத்துவதில் கண்ணாக இருந்தார் என்பது என் அனுபவம். ஒரு சமயம் மாணவர்களிடம் அவர் ஒரு கதையை கூறினார்,

  ஒரு வீட்டின் முன் நீண்டகாலமாக உள்ள ஒரு வேப்ப மரத்தை வெட்டுவது என தீர்மானித்திருந்தனர். மறுநாள் வெட்டலாம் என்று இருந்தபோது, அன்று இரவு அந்த மரத்தில் இருந்து வெள்ளையாக ஒரு உருவம் ஒன்று தென்பட்டதோடு, காற்று பலமாக அடித்தது என்று மாணவர்களை தன் வயப்படுத்திக் கொண்டிருந்தார். மாணவர்களும் ஏறக்குறைய அவரது பேச்சில் மயங்கி விட்டிருந்தனர்.

  அவர் பேசி முடித்ததும், நான் குறுக்கிட்டு ஒரு கேள்வி கேட்டேன், சார், எனக்குத் தெரிந்து குழந்தைப் பருவத்தில் இருந்து பேயை பற்றி பேசுபவர்கள் எல்லோரும் அது இரவில் நடமாடுவதாகதான் கூறுகிறார்கள். ஆனால் என் பார்வையில் பகலும், இரவும் ஒன்றுதான். அதாவது, பூமி சுழற்றியில் ஏற்படும் மாற்றம்தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. இப்படியிருககும் போது ஏன் பேய் பகலில் தெரிய மாட்டேங்குது என்றேன். உடனே அவர் சுதாரித்துக் கொண்டு YES. YES. அதுசரி.... நானும் .... வேறு சப்ஜட்டுக்கு தாவிவிட்டார். இந்த உதாரணத்தைப் பொறுத்தவரை என்ன கூற வருகிறறேன் என்றால் மக்களுக்கு எந்த விஷயத்தைப் பற்றியும் ஏன், எப்படி என்கின்ற கேள்வி ஞானத்தை வளர்க்கும் பண்பாட்டை முதலில் விதைக்க வேண்டியுள்ளது.

  ReplyDelete
 6. சந்திப்பு,
  தங்கள் கருத்துக்கும்,பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 7. ஆத்திகர் எல்லாம் சாதுக்களா ? நானும் ஒன்று 10 நாள்களுக்கு முன்பு எழுதி இருந்தேன் !

  ReplyDelete
 8. திரு.கோவி.கண்ணன்,

  தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

  ReplyDelete
 9. சிறந்த பதிவு! வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 10. நல்ல பதிவு அருண் சிவா. ஆங்காங்கே ஒன்றிரண்டில் சிறு மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் மொத்தத்தில் இந்தப் பதிவில் வைத்திருக்கும் கருத்துகளுடன் ஒத்துப் போகிறேன். கருத்துகள் சொன்னப்பட்ட விதத்தினைக் கண்டும் மகிழ்ச்சி.

  சாக்ரடீஸ் சொன்னது போல் கண்ணனும் புத்தனும் கூட சொல்லியிருக்கிறார்கள். கீதையில் ஒவ்வொரு கருத்தாகச் சொல்லிக் கொண்டு வரும் போது 'இது என் கருத்து. இதனை நீ உன் சுய அறிவினைக் கொண்டும் அறிஞர்களுடன் கலந்து பேசியும் ஆராய்ந்து பார்த்துச் செயல்படு' என்று சொல்வார். புத்தரும் 'என் கருத்துகளை நான் சொன்னேன் என்பதற்காக அப்படியே ஏற்றுக் கொள்ளாதே. அதனை உன் சுய அறிவின் படி பகுத்தறிந்து ஏற்றுக் கொள்' என்கிறார். அண்மையில் பெரியார் அப்படி சொல்லியிருப்பதாக நண்பர்களின் பதிவுகளிலும் அவரது கட்டுரைகளிலும் படித்திருக்கிறேன். கண்ணனையும் புத்தரையும் பெரியாரையும் இங்கே ஒரே மூச்சில் சொன்னது பகுத்தறிவு என்பது ஒரு சாராருக்கு மட்டுமே உரியதில்லை என்ற என் கருத்தைச் சொல்வதற்காக.

  புள்ளியியல் கருத்தைப் பற்றி சிறில் அலெக்ஸ் சொல்லுவதை நீங்களும் ஏற்றுக் கொள்கிறீர்கள் (என்று நினைக்கிறேன்). நானும் அப்படியே தான் நினைக்கிறேன். ஆனால் அந்த புள்ளியியல் கருத்தை நீங்கள் சரியென்று வாதிட்டால் அது தவறு என்று காட்டும் முகமாக ஒரே ஒரு எடுத்துக்காட்டைச் சொல்ல விரும்புகிறேன். தமிழகத்தில் தமிழர்கள் அதிகம் (80% என்று வைத்துக் கொள்வோம்); மற்ற மொழியினர் 20%. குற்றம் செய்பவர்கள் இரண்டு வகையினராகவும் இருக்கலாம். ஆனால் தமிழர்கள் 80% என்பதால் எண்ணிக்கையின் படி அவர்களில் அதிகம் குற்றம் செய்பவர்கள் இருக்கலாம். அப்படியானால் தமிழர்களில் பெரும்பாலானோர் குற்றம் செய்கிறார்கள் என்று சொன்னால் - புள்ளியியலின் படி சரியாக இருக்கலாம் - ஆனால் அது ஒரு தவறு; அவதூறு என்பது தானே உண்மை.


  காட்டுக்கூச்சலோடு பேசப்படும் பகுத்தறிவு வாதம் எதிர்வினையை உண்டாக்கியதே தவிர உண்மையான மறுமலர்ச்சியை உண்டாக்கவில்லை என்ற சந்திப்பின் கருத்துடனும் உடன்படுகிறேன். இன்றும் வலைப்பதிவுகளில் வெற்றுச் சவடால்களுடனும் காட்டுக்கூச்சலாக பகுத்தறிவு பேசப்படும் போது அது தான் தோன்றுகிறது.

  ReplyDelete
 11. தாங்கள் வலைப்பதிவில் நிகழும் அன்றாட மதவாத மற்றும் பகுத்தறிவுப் பிரசங்கங்களால் மிகவும் நொந்து போனவர் என்று அறிகிறேன். நான் கூறியதன் தொகுப்பு இதுதான்: மதம் ஆகட்டும், பகுத்தறிவு ஆகட்டும் மனிதனுக்குப் பயன் படவேண்டும்.தங்கள் கருத்திற்கு நன்றி.

  ReplyDelete
 12. என்ன தருமி ஐயா,

  ம்ம்ம்ம்...என்ன அர்த்தம்?

  ReplyDelete
 13. அருண் சிவா, சிறில் அலெக்ஸ், குமரன் மற்றும் தருமியின் மறுமொழிகளோடு உடன்படுகிறேன்.
  இறை நம்பிக்கை - இறை மறுப்பு இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். பிரிக்க இயலாது. இறை மறுப்பு என்பதே இறை நம்பிக்கையை வளர்க்கத்தான். ஆத்திகவாதி நாத்திகனாவதும் நாத்திகவாதி ஆத்திகனாவதும் இயல்பே.
  உலகம் இருக்கும் வரை இவை இரண்டும் இருக்கும்.

  யாரும் ஆசைப்படக் கூடாது - ஆசை அழிய வேண்டும் என ஆசைப்பட்டவன் புத்தன். இறை மறுப்பின் வேரே இறை நம்பிக்கை தான்

  ReplyDelete
 14. சீனா ஐயா,

  தங்கள் கருத்துக்கு நன்றி!

  ReplyDelete
 15. //அருண் சிவா, சிறில் அலெக்ஸ், குமரன் மற்றும் தருமியின் மறுமொழிகளோடு உடன்படுகிறேன்.
  இறை நம்பிக்கை - இறை மறுப்பு இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். பிரிக்க இயலாது. இறை மறுப்பு என்பதே இறை நம்பிக்கையை வளர்க்கத்தான். ஆத்திகவாதி நாத்திகனாவதும் நாத்திகவாதி ஆத்திகனாவதும் இயல்பே.
  உலகம் இருக்கும் வரை இவை இரண்டும் இருக்கும்.

  யாரும் ஆசைப்படக் கூடாது - ஆசை அழிய வேண்டும் என ஆசைப்பட்டவன் புத்தன். இறை மறுப்பின் வேரே இறை நம்பிக்கை தான்//

  இப்படி எல்லாம் வந்து குட்டையை குழப்பக் கூடாது சொல்ல வருவதை தெளிவாக சொல்ல வேண்டும்.

  எந்த இந்து மத கடவுளும் வேறு மதத்துக்காரனை கோவிலுக்குள் அனுமதிக்காதே என்று சொன்னதில்லை.
  போலீஸ் அனுமதி கிடையாது சில இடங்களில் இதெல்லாம் எதர்க்கு வழி வகுக்கிறது குற்றவாளிகளுக்கு புகளிடம் கொடுக்கவே வழி செய்கிறது.

  எவன் எந்த மதத்தில் இருந்தால் என்ன எதர்க்கு பிரச்சார கூட்டம். இப்படி கூட்டம் கூட்டி விளம்பரப்படுத்தி எந்த மக்களுக்கு லாபம். யாரோ ஒரு சிலரின் லாபத்துக்காக தன் சமூகத்தை சேர்ந்த அனைத்து மக்களின் நேரத்தையும் உழைப்பையும் சிந்தனையும் வீனடிக்கத்தானே.

  ReplyDelete
 16. புரட்சித்தமிழரே,

  //எந்த இந்து மத கடவுளும் வேறு மதத்துக்காரனை கோவிலுக்குள் அனுமதிக்காதே என்று சொன்னதில்லை.//

  எதையும் மனிதர்கள் கடவுள் சொல்லிச் செய்யவில்லை.

  //போலீஸ் அனுமதி கிடையாது சில இடங்களில் இதெல்லாம் எதர்க்கு வழி வகுக்கிறது குற்றவாளிகளுக்கு புகளிடம் கொடுக்கவே வழி செய்கிறது.//

  குழப்பக்கூடாது என்று சொல்லிவிட்டு, நீங்களே இந்த குழப்பு குழப்புகிறீர்.

  ReplyDelete
 17. //போலீஸ் அனுமதி கிடையாது சில இடங்களில் இதெல்லாம் எதர்க்கு வழி வகுக்கிறது குற்றவாளிகளுக்கு புகளிடம் கொடுக்கவே வழி செய்கிறது.//

  போலீஸ் நுழைய கூட சில இடங்களில் அனுமதி கிடையாது என்று கூருகிறேன். அந்த இடத்தில் நடக்கும் ஒரு சதி செயலை எப்படி கண்கானிப்பது என்று கூறுகிறேன்.

  ReplyDelete
 18. //பகுத்தறிவே ஒரு சித்தாந்ததில் முதன்மை இடம் பெற வேண்டும். ரஷ்யாவில் மார்க்ஸ்ய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கம்யுனிச ஆட்சியில் கடவுள் மற்றும் மதங்கள் முற்றிலும் மறுக்கப்பட்டன. இவை பகுத்தறிவால் தோன்றியவை அல்ல. சட்டதினால் மாற்றப்பட்டவை. எனவே இவை காலப்போக்கில் செயலளவில் பலகீனம் அடைந்தன.//

  நல்ல விளக்கம் கு.பிசாசு.

  ReplyDelete
 19. கடவுள் இருக்கிறாறோ இல்லையோ நமக்கென்ன வந்தது நீ நல்ல படியாக நடக்கும்போது. நீ கடவுளை வணங்கவில்லை என்பதர்க்காக தண்டிப்பாரா எதர்காக இத்த கூச்சல் நம் சமூகத்தில். இன்று சானியமிர்சா அனியும் உடை பெரிய பிரச்சினையை கிளப்புகிறார்கள். அவர் அனியும் உடை அவருடை சொந்த பிரச்சினை அதை ஏன் மதத்தை அவமதிப்பதாக கூறி ஒரு பெண்ணை முன்னேறவிடாமல் தடுக்கும் ஒரு ஆதிக்க செயலாக தென்படுகிறது. பர்தா அணிந்து கொண்டு டென்னிச் விளயாட முடியாது என்று எந்த கேனப்பயளுக்கும் தெறியாதா? ஏன் இந்த அளப்பறை.

  ReplyDelete
 20. குட்டி பிசாசு அண்ணே !!!

  நல்ல கருத்தை வெதச்சிருகீங்க..!!!

  எந்த மதத்திலயும்,ஆரம்பிச்சவங்க எல்ல மக்களும்
  ஏத்துக்கொள்ளக் கூடிய "Love is God", அப்புடீங்கற
  விஷயத்தை வலிமையா சொன்னாங்க...

  ஆனா.. அத பரப்புனவங்க தங்களோட விருப்பத்துக்கு
  ஏத்த மாதிரி திரிச்சி சொல்லி மக்களுக்கு "மதம்" புடிக்க வச்சிட்டங்க...

  stay away from religion get nearer to god

  ReplyDelete
 21. தமிழ் நாட்டில் ஒருவன் கருப்பு சட்டை போட்டால் மட்டும் தான் பகுத்தறிவுடன் சிந்திக்கிறவன் என்று கூறினால் அது பகுத்தறிவே அல்ல. ஒரு குழந்தை பிறந்தது முதல் அதன் மீது எந்த கருத்தேற்றமும் செய்யப்படாமல் இருக்கும் போது அது தானாக நல்ல சிந்தனை உள்ள குழந்தையாகவே வளரும். அதன் மீது நாமாகத்தான் நம் கருத்துக்களை தினித்து அதன் சிந்தனையை பாழடிக்கிறோம்.

  ஒரு குழந்தை என்ன படிக்கவேண்டும் எந்த வேலை செய்யவேண்டும் என்று தீர்மானிப்பதை அதன் பாடே விட வேண்டும். நீங்கள் நினைக்கும்படி எல்லாம் உங்கள் மகன் மகள் ஆகவேண்டும் என்பது எவ்வளவு முட்டாள் தணம் என்று நினைத்துப்பாருங்கள்.
  இதெல்லாம் பதிவுக்கு சம்பந்தம் இல்லை என்று நினைக்காதீர்கள் எத்தனை பணக்காரர்கல் தங்கள் பிள்ளைகளை மிலிடெரிக்கு அனுப்ப நினைக்கிறார்கள்.

  ReplyDelete
 22. ஜாலிஜம்பர், மதுரைக்காரர்...

  கருத்துக்கு மிக்க நன்றி!!

  ReplyDelete
 23. புரட்சி தமிழரே,

  மிக்க நன்றி!! ரொம்ப உணர்ச்சிவசப் ப்ட்டுடிங்க போல! :)

  வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 24. ஆனால் வந்து வாய் கிழிய சொல்வார்கள் ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்று. இன்று எவனும் போருக்கு சென்று சாகவும் வெயிலில் கஷ்ட்டபட்டு விவசாயத்தில் உழைக்கவும் விரும்பவில்லை வேறு வழி இன்றியே செய்கிறார்கள். வீட்டில் உண்டு கொழுத்து டி.வில் செய்தி பார்ப்பதர்காக எவனோ ஒருவன் எல்லையில் உயிர்விடவேண்டும்.
  இவர்களை ஏழைகளை கருத்தேற்றவே ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்று முழக்கமிடுவது.
  நமது நாட்டுக்காக பாடுபடும் மந்திரி எம்.பி எம்.எல்.ஏ இவர்களுடைய மகன்கள் மிலிடெரி சேவையில் ஈடுபடலாமே அப்போதாவது தன் மகன் செத்துவிடுவான் என்ற பயத்திலாவது வீனான போர் காரியங்கலில் ஆட்ச்சியாளர்கள் இறங்க மாட்டார்கள்.

  ReplyDelete
 25. பெரியார் பகுத்தறிவு தான் பேசினார், அவர் இருக்கும்போதே அவருக்கு ஊர் ஊருக்கு சிலை வைத்து மாலை போட்டார்கள், இன்னமும் வீரமணி போட்டுக் கொண்டுதான் இருக்கிறார். இதைக் கேட்டா என்ன தப்புன்னு மறு கேள்வி கேட்கிறார்கள். கடவுள் சிலை கல்லு என்றால் பெரியார் சிலையில் அவர் இருக்கிறாரா என்ன?

  ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய