அடிப்படைக்கல்வியும் சிறார்தொழிலாளர்களும் இணைந்த பிரச்சனைகள்!
சமீபத்தில் தமிழ்நாடு சென்றபோது, பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டு இருந்தது. என்னுடைய அண்ணியின் உறவுக்கார சிறுவனொருவன் எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பள்ளியில் தான் படிக்கிறான். அடிக்கடி எங்கள் வீட்டிற்கும் வருவான். ஆனால் பள்ளி தொடங்கி ஒரு வாரம் ஆகியும் அச்சிறுவன் வரவேயில்லை. நான் என் அண்ணியை இதுபற்றி கேட்டபோது, பத்தாம் வகுப்பு படிக்க வைக்க முடியாமல் அச்சிறுவனுடைய தந்தை அவனுடைய படிப்பை நிறுத்தப்போவதாக உள்ளார் என்று கேள்விபட்டேன், நான் சிறுவனுடைய தந்தையிடம் இதுபற்றி பேசினேன்.
அவர் ஒரு நெசவுத்தொழிலாளி.ஒரு நெசவாளியின் மாதவருமானம் 2000 ரூபாய்தான் இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் உழைத்தால் 3000 வரை கிடைக்கும். இதுதான் இவர்கள் வாழ்க்கைத்தரம். ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கு மேல் செலவு செய்யும் என் போன்றவனுக்கு இது செறிக்க முடியாத விஷயம் தான். சிறுவன் அரசு உதவிப் பள்ளியில் படிப்பதால் 350 ரூபாய் கட்டணம் கேட்கிறார்கள் என்றும், அப்படியே கட்டணம் செலுத்தினாலும் பாடம் எழுத நோட்டுபுத்தகம், பள்ளிச்சீருடை என 500 ரூபாய் வரை ஆகுமென்றும் அவர் கூறினார். மேலும் சிறுவனை இயந்திர நெசவுத்தறியை இயக்கும் வேலைக்கு அனுப்பப்போவதாக கூறினார். அவர் வருத்தம் எனக்கு புரிந்தது.
சிறுவன் மேலும் படிக்க நான் செலவு செய்யத்தயார் என்று கூறிவிட்டு, நோட்டுப்புத்தகமும் பள்ளிச்சீருடையும் வாங்கிக்கொடுத்துவிட்டு வந்தேன்.இந்த உதவியை நம்மால் எல்லாருக்கும் செய்ய இயலாது தான். நான் கூறுவதைக்கேட்டால் இலவசகல்வி இன்னும் நடைமுறையில் உள்ளதா? என்று சந்தேகம் நிச்சயம் எழும். அரசுப்பள்ளியில் உள்ளது என்று சொல்பவர்கள், தரமான கல்வி எல்லாருக்கும் வழங்க இயலுமா? படிக்க இடம் கிடைக்காமல் தான் அச்சிறுவன் அரசு உதவிப்பள்ளியில் சேரும் நிலை.
எங்கள் ஊர்ப்பகுதியில் தீப்பெட்டித்தொழில், பீடித்தொழில், நெசவுத்தொழில்,தோல் தொழிற்சாலை அதிகம் உண்டு. இவற்றில் பல சிறுவர்கள் வேலைக்குப் போவதைப் பார்த்து இருக்கிறேன். பெரும்பாலும் சுமார் 8-12 வயது சிறுவர்கள் தான். இந்த மனக்குமுறல் எங்கு சென்றாலும் அகலுவதில்லை. இந்தியாவின் ஒரு உயர்தர தொழிற்நுட்ப கல்விநிலையத்தில் அமைந்துள்ள உணவகத்தில் சிறார்கள் வேலை செய்வதைப்பார்த்தபோது நொந்து போய்விட்டேன். இதையெல்லாம் பார்த்துவிட்டு நாடு முன்னேற்றம் குதிரைப் பாய்ச்சலில் உள்ளதாக சொற்பொழிவாற்றும் கோயபல்ஸ்களை செருப்பால் அடிக்கத் தோன்றும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.உலகத்திலுள்ள குழந்தைத் தொழிலாளர்களில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் தான் உள்ளனர். இந்தியாவில் 5-14 வயதுடைய 44 மில்லியன் சிறார் தொழிலாளர்களாக உள்ளதாக உலக தொழிலாளர் அமைப்பு கணக்கிட்டுள்ளது.குறைந்த செலவில் பெரிய லாபம் பார்க்க விரும்பும் முதலாளிகள் சிறார்களை தொழிலுக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் அரசாங்கம் அடிப்படைக் கல்வியும் அளிக்காமல், சம்பிரதாயச் சட்டங்களைச் சுழற்றி மக்களையே பதம்பார்க்கிறது.
நாளைய தலைமுறைக்கு அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யாமல், வெறும் பேச்சளவில் முன்னேற்றத்தை அடைந்துவிட முடியாது. இந்தியாவின் 20% GNP குழந்தை தொழிலாளர்களால் என்பது மறுக்க முடியாத வெட்கப்பட வேண்டிய உண்மை. பெரும் தொழிற்வளர்ச்சியடைந்த மாநிலங்களில் தான் சிறார் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்.”தொழிற்புரட்சி தான் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகக்காரணம்்” என காரல் மார்க்ஸ் கூறியது ஞாபகம் வருகிறது. இதற்காக தொழிற்சாலை வேண்டாம் என்று கூறவில்லை. சிறார்தொழிலாளர்கள் தனிப்பட்ட பிரச்சனையல்ல! மக்கள்தொகை, அடிப்படை கல்வியின்மை, ‘வெத்துவேட்டு’ தீர்வுகள், ‘செத்தபாம்பு’ சட்டங்கள், முதலாளியத்துவத்திற்குச் சார்பான பொருளாதாரக் கொள்கைகள் என பல்வேறு கலவையான பின்னிப்பிணைந்த அடித்தளத்தின் மேல் அமைந்துள்ளது. இதன் தீர்வு எளிதானது! முன்னிற்கும் செயல்பாடுகள் கடினமானது. ஆனால் செயல்படுத்தாமல் விட்டால் “நாளை மலரும் முல்லை”களைக் கிள்ளியெறியும் என்பது திண்ணம்!


