மறைந்த தெலுங்கு நடிகர் சித்தூர் நாகைய்யா அவர்களுக்கு ஆந்திர அரசு சிலை எழுப்பியுள்ளதாக செய்தியில் படித்தேன். அந்தக்கால நடிகர்களில் எனக்குப்பிடித்தவர்கள் நாகைய்யா, சுப்பைய்யா, பாலைய்யா,(அய்யா, அப்பா என்ற விகுதியை சேர்த்துக்கொள்ளுவதை அக்காலத்தில் ஸ்டைல்) எம்.ஆர்.ராதா போன்றவர்கள் யதார்த்தமான நடிப்பின் மூலம் வெகுஇயல்பாக தங்களுடைய கதாபாத்திரங்களை பிரதிபலிப்பதில் வல்லவர்கள்.அவர்களில் நாகைய்யாஅவர்கள் நான் பார்த்த பெரும்பாலான படங்களில் தந்தையாகவோ, ஆன்மீக துறவியாகவோ நடித்திருந்தார். குறிப்பாக என் நினைவில் வருபவை: அசோக்குமார் என்ற படத்தில் தியாகராஜபாகவதரின் தந்தையாக நடித்து இருந்தார் (இப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் எம்.ஜி.ஆரும் நடித்திருந்தார்). பக்த மீரா படத்தில் மீராவின் கணவர் ராணாவாக நடித்திருந்தார்.(இப்படத்தில் எம்.எச்.சுப்புலட்சுமி அவர்கள் மீரா கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்). சரஸ்வதி சபதம் படத்தில் புலவரின் (சிவாஜி) தந்தையாக வருவார். "கலைகளுகெல்லாம் அதிபதி என் கண்மணி வித்யாபதி" (பேச்சில் தெலுங்கு வாசம் இருந்தாலும்) என்று ஒரு தந்தையாகவே மாறி உருகிப்போவார்.தெனாலிராமன் படத்தில் அப்பாஜியாக நடித்தார். இவர் சுயமாக பாடவும், இசையமைக்கவும் செய்தார்.
துறவியாக நடிக்கும்போது நாகைய்யா ஒழுக்கமான துறவிபோலவே காட்சியளிப்பார். ராமு,தெய்வமகன்,அனாதைஆனந்தன் படங்களில் துறவியாக வருவார். இப்படங்களில் இவர் பாடும் கிருஷ்ணன் பாடல்கள் காலத்தால் அழியாதவை. நான் சிறுவயதாக இருக்கும்போது தெய்வத்தை வணங்கும் போது இந்தப்பாடல்களின் சிலவரிகளைத்தான் பாடுவேன்.
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா ........
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக்கண்ணீரை கண்டதும் கண்ணன் வந்தான் .......
இந்த இரண்டு பாடல்களைவிட அனாதை ஆனந்தன் படத்தில் வரும் சீர்காழி கோவிந்தராஜனின் கனீர்குரலில் உதிக்கும் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது.
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்
காற்றடித்தால் அவன் வீடாவான் கடுமழையில் அவன் குடையாவான்
ஆற்றார் அழுதால் அழுதகண்ணீரை அங்கே துடைக்கும் கையாவான்
வெயிலினிலே தான் அவன் பிறந்தான் மழையினிலேறி மனைபுகுந்தான்
உறவறியாத குழந்தைக்கெல்லாம் உறவினனாக அவன் வருவான்
அதிகமான வருமானத்துடன் நடித்துவந்த இவர் தாராள உதவிசெய்யும் மனப்பான்மையால் மற்றும் தயாரித்த படங்கள் தோல்வியைத் தழுவியதால், 100 ரூபாய்கெல்லாம் நடிக்கவேண்டி வந்தது. நம்நாடு என்ற எம்.ஜி.ஆர். படத்தில் ஒன்றிரண்டு காட்சியில் தோன்றி இறந்துவிடுவார். இதுதான் அவருடைய கடைசி தமிழ்படம் என்று நினைக்கிறேன். 1938 முதல் 1973 வரை 200க்கும் மேற்ப்பட்ட தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். 1904-ல் பிறந்த இவர் 1973-ல் இறந்தார்.



