Thursday, April 11, 2013

எம்.ஆர்.ராதா அல்லது Bad cheque

என் தந்தையின் நண்பர் ஒருவர், எங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல இருந்தவர். சொந்தம் இல்லாவிடினும் நானும் என் அண்ணனும் அவரை "விசு மாமா" என்று தான் அழைப்போம். என் தந்தையும் அவரும் சேர்ந்து ஒரு தொழில் தொடங்கினார்கள். என் தந்தை முழுபொறுப்பையும் நண்பரிடமே ஒப்படைத்து இருந்தார். சந்தர்பத்தைப் பயன்படுத்தி நண்பரும் அவருடைய மைத்துனரும் சேர்ந்து பல ஆயிரங்கள் மோசடி செய்துவிட்டனர். தான் சுயமாக தொழில் செய்வதாகக் காட்டி பல இடங்களில் கடன் வேறு வாங்கிவைத்திருந்ததால், மேலும் சிக்கல். தொழில் சம்பந்தமான பொருட்களை விற்கவும் முடியவில்லை. இது நடந்தது 20 வருடங்களுக்கு முன், இப்போது அப்பணத்தின் மதிப்பு லட்சங்களில் இருக்கும். தொழில் முழுதும் கடனில் மூழ்கிவிட்டது. என் தந்தையும் பழகியதோஷத்திற்காக பலமுறை சாந்தமாகக் கேட்டுப்பார்த்தார். சரியான பதில் வரவில்லை. ஒருமுறை பொறுமையிழந்து தெருவில் சண்டை போடும் அளவிற்கு வந்துவிட்டது. பிறகு அந்த நண்பர், ஒருசில கடனுக்காக மட்டும் 20000 ரூபாய்க்கான ஒரு காசோலை கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்.  அந்தக் காசோலை பணமில்லாமல் வங்கியில் இருந்து திரும்பி வந்துவிட்டது. திரும்ப அந்த நண்பரைத் தொடர்புகொண்டு காசோலை திரும்பியதைப் பற்றிக் கேட்டால், "பாகப்பிரிவினை எம்.ஆர்.ராதா" போல பதில் சொல்லி இருக்கிறார். என் தந்தை பணமில்லாத காசோலைக் கொடுத்து ஏமாற்றியதாக அவர் வழக்கு தொடுத்தார். நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது போடப்பட்ட வழக்கு, கீழ் கோர்ட் மேல் கோர்ட் எனத் தாவி, நான் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தவரை நடந்தது. நம் நாட்டின் நீதிமன்றத்தின் லட்சணம் அப்படி? அப்போதும் வழக்கு முடிவுராமல், அந்த நண்பரே வெறுத்துப்போய், 25000 ரூபாய் பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு கொடுத்துவிட்டார்.


சமீபத்தில் வெளியூருக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக செல்ல வேண்டிவந்தது. போகும் வழியில், சாப்பாட்டிற்காக வேன் நிறுத்தப்பட்டது. அனைவரும் சென்று சாப்பிடப் போனோம். வண்டி ஓட்டுனரையும் சாப்பிட அழைக்குமாறு சிலர் சொல்ல, நான் அழைக்கச் சென்றேன். சென்று பார்த்தால், ஓட்டுனர் வேறுயாருமில்லை "விசு மாமா". எனக்கு அவருடன் கதைக்கப் பிடிக்கவில்லை. வேறொருவரை அனுப்பிவிட்டு வந்துவிட்டேன். பிறகு அன்று மாலை, வீட்டிற்கு தொலைபேசும்போது, அப்பாவிடம் நடந்ததைக் கூறினேன். என் தந்தை "டேய்! பாவம்டா அவன். அவனை அவனோட மச்சான் ஏமாத்திடானாம். வீட்டைக் கூட வித்துட்டான். குடும்பப் பிரச்சனை. தனியாகத்தான் இருக்கான். நீ பார்த்து ஏதாவது பணம் கொடுத்துட்டு வா!" என்றார். என்னதான் இருந்தாலும், எனக்கு விசு மாமாவை சந்திக்க விருப்பமில்லை. நான் வேறொருவரிடம் பணம் கொடுத்து கொடுக்கச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஒரு பக்கம் என்னுடைய தந்தை அவருடைய நட்புக்குக் கொடுக்கும் மரியாதையை எண்ணி ஆச்சரியமாகவும் இருக்கும், அதேசமயம் அவருடைய எளிதில் ஏமாறும் அப்பாவித்தனத்தை எண்ணி வெறுப்பாகவும் இருக்கும்.

Cheating is a choice, not a mistake. 

தற்சமயம்   என்னுடைய தந்தை பணிஓய்வு பெற்றுவீட்டில் இருக்கிறார். சில சமயம் வேலை ஏதும் இல்லாமல் சலிப்பாக இருப்பதாக சொல்வார், "வேணும்னா நீயும் நானும் ஒரு தொழில் தொடங்குவோம், இந்த முறை நீ என்னை ஏமாத்து" என்பேன். "அறிவுகெட்டவனே" என வழக்கம்போல செல்லமாக அடிப்பார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இளையராஜாவின் நகைச்சுவை இசைக்கோர்வை

80,90 களில் இளையராஜா இசையமைத்த திரைப்படங்களில் பின்னணி இசை இன்றும் பலர் மனதில் நீங்காத இடத்தைப் பிடிப்பவை. அவற்றில் சில இசைக்கோர்வைகளைக் கேட்டால், படத்தின் காட்சிகள் நம் கண் முன்னே தோன்றும். அப்படி ஒரு ஈடுபாட்டுடன் நாம் அக்காட்சிகளை ரசித்திருப்போம். என்னைக் கவர்ந்த சில நகைச்சுவைக் காட்சிகளுக்கான பின்னணி இசை உங்களுக்காக.

Wednesday, April 10, 2013

சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ

அமைதிப்படை
அமைதிப்படை இரண்டாம் பாகம் வெளிவரப்போகிறதாம். ஆனால் அதன் ட்ரெய்லர் பார்த்தால், படம் சுமாராகவே இருக்கும் எனத் தோன்றுகிறது. சில வசனங்கள் மஞ்சதுண்டை நேரடியாகத் தாக்குவது போலவே இருந்தன. …பாடல் வெளியீட்டுவிழாவில், மணிவண்ணன் பேசியது சுவாரசியம்.

…முதல் வந்த அமைதிப்படை படத்தில் அரசியல் நையாண்டி வசனங்களுக்காக பெரிதும் பேசப்பட்டது. நித்யாநந்தா புகழ் ரஞ்சிதா நல்லா அழகாக இருப்பாங்க. வயதான வில்லன் வேடத்தில் சத்யராஜ் அருமையாக நடித்திருப்பார். ஆனால் மற்றொரு இளைய சத்யராஜ் வேடத்தில் ஓவர் ஆக்டிங்.

…எனக்குப் பிடித்த சில வசனங்கள்:
…# தேங்கா பொறுக்கிறது தப்புன்னா, சாமிக்கு தேங்காய் உடைக்கிறதும் தப்புதாங்க.
…# 6வது ரவுண்டுலயும் போதை ஏறாட்டி அப்புறம் எதுக்கு அந்த கருமத்தை குடிக்கோணும்.
…#போனை கண்டுபுடிச்சது கிராகம்பெல்ங்குற விஞ்ஞானியா இருக்கலாம்.  ஆனா அதுல ஒத்து கேக்குரத கண்டுபிடிச்சி இந்தியாவுக்கு சொல்லிக் கொடுத்தது நான் தான்.
#சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ 

இளையராஜாவின் இசையில் ஒரு நல்ல பாடல் "சொல்லிவிடு வெள்ளி நிலவே". ஆனால் இப்பாடல் படத்தில் வரவில்லை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிக்கோரி
முன்பெல்லாம் டீக்கடையில் காப்பி எனச் சொல்லி ஏமாற்றி சிக்கோரி (Chicory) காப்பி போடுவாங்க. காப்பி போன்று இருந்தாலும் சிக்கோரி காப்பியில் காப்பியின் சுவை வருவதில்லை. ப்ரூ விளம்பரத்தில் கூட சிக்கோரி  கலக்காத கலவை என வரும். இப்பவெல்லாம் காபின்ப்ரீ காப்பி என சிக்கோரி காப்பியைத் தான் விற்கிறார்கள். இந்த சிக்கோரி ஒரு வகைக் கிழங்கிலிருந்து எடுக்கப்படுகிறது. இதற்கு மேல் வரும் இளசான செடியை அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் சலாடாக சாப்பிடிகிறார்கள். இதே வகைச் செடியின் முதிர்ந்த இலைகள் தமிழில் காசினிக்கீரை எனப்படுகிறது. காசினிக்கீரை போண்டா கேள்விப்பட்டிருப்பீர்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஜோதிஜியின் தேவியர் இல்லம் பதிவில் இட்ட பின்னூட்டம். 
//சிங்களர்கள் மரபணு ரீதியாக மட்டுமல்ல. எல்லாவகையிலும் அவர்கள் தமிழர்கள் தான் என்று வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் இடையிடையே கலப்புகள் அதிகரித்து கண்றாவியாக பல நிகழ்வுகள் நடந்தேறி மனதளவில் பிறழ்வுகளாக மாறிப் போனார்களோ என்று நினைத்துக் கொள்வுதுண்டு.//

சிங்களவர்களும் தமிழர்கள் தான் என்பதை சிங்களவர்கள் ஒத்துக்கொள்வது இருக்கட்டும். முதலில் இதை ஈழத்தமிழர்கள் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். யாழ்ப்பாணத்தமிழர்கள் தான் அக்மார்க் தமிழர்கள் என மார்தட்டிக்கொள்பவர்கள்.
எனக்கு ஒன்று தெரிலிங்க! தமிழன் என்றால் யார்? நன்றாகத் தமிழ் தெரிந்தால் தான் தமிழனா? வேற்றுமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பலர் தமிழகத்தில் வாழ்வதில்லையா? அவர்கள் தமிழர்கள் இல்லையா?

Arab என்பவர் யார் என்பதற்கு
The Arab League, a regional organization of countries intended to encompass the Arab world, defines an Arab as: An Arab is a person whose language is Arabic, who lives in an Arabic-speaking country, and who is in sympathy with the aspirations of the Arabic-speaking peoples.

இதே பொருள் தமிழருக்கும் பொருந்தும். தமிழ் பேசும், தமிழ்மண்ணில் வசிக்கும், தமிழ் மொழியையும் தமிழ் மக்களையும் நேசிக்கும் அனைவருமே தமிழர்கள் தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நான் தொடக்கப்பள்ளி படிக்கும் காலங்களில் என்ன்னுடைய வகுப்பில் பாதிக்குப்பாதி முஸ்லீம் சிறுவர்கள் படித்தார்கள். இன்ஸ்க்பெக்ஷன் நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் கைலி/லுங்கி கட்டிக்கொண்டுதான் வருவார்கள். வெள்ளிக்கிழமை வந்தால் போதும். காலைவேளை வகுப்பு எண்ணிக்கை பாதியாக குறைந்துவிடும். மதியம் நமாஸ் முடிச்சிட்டு சாப்பிட்டுவிட்டு இரண்டுமணிக்கு மேல தான் வகுப்புக்கு வருவார்கள். கண்ணுக்கு மை, சென்ட், ரோஸ்பவுடர், முகத்துக்கு மினுமினுப்பு போட்டுக்கொண்டு வருவார்கள். நாங்களும்  சென்ட், மினுமினுப்பு வாங்கி போட்டுக்கொள்வோம். சிலருடைய  பெற்றோர்கள் வளைகுடாவில்  வேலை பார்த்துவந்தார்கள். சிலருடைய பெற்றோர்கள் பஜாரில் காய்கறிக்கடை வைத்திருந்தார்கள். சிலருடைய பெற்றோர்கள் லுங்கி ஏற்றுமதி செய்து வந்தார்கள். இப்போதும்  என்னுடைய பல முஸ்லீம் நண்பர்கள் எங்கள் ஊரில் கடை வைத்திருக்கிறார்கள். நான் அவர்களுடைய கடைகளுக்குப் போகாமல் தவிர்க்கக் காரணம், வாங்கிய பொருளுக்கு எவ்வளவு வற்புறுத்தினாலும் பணம் வாங்கமாட்டார்கள். 
பிறகு மேல்நிலைப்பள்ளி வந்ததும், இம்ரான் என்றொரு நண்பன். திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் உருது அல்லது அரபியை மொழிப்பாடமாக எடுத்துப் படிக்கும் முஸ்லீம் மாணவர்கள் உண்டு. இவனும் அப்படியே. தமிழை சரளமாகப் பேசமாட்டான். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நன்றாக ஊர் சுற்றுவோம். "காலெல்லாம் நோவுவுது...ரா" என்பான். தசாவதாரம் படத்தில் நாகேஷ் ஒரு இடத்தில் இதே வசனம் சொல்லுவார் "காலெல்லாம் நோவுது...பா".  …

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இந்த வாரம் ஈவில் டெட் (Evil Dead) படம் அமெரிக்காவில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போதைய ரசனைக்கேற்றவாறு கோரமான காட்சிகள் அதிகமாக இடம் பெற்றுள்ளன. கிராபிக்ஸ் அதிகமாக பயன்படுத்தப்படவில்லை.  ட்ரெலர் பார்த்தேன், பரவாயில்லை எனத் தோன்றியது. பழைய படத்தின் நாயகனான ப்ரூஸ் கேம்ப்பெல், இயக்குனர் சாம் ரைமி இருவரும் தயாரிப்பாளர்கள்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@