Saturday, April 13, 2013

கடவுள் வணிகப் பொருளாகிப்போன காலத்தில்

ஆலயடி விநாயகர் தலபுராணம்

என்னுடைய சொந்தக்கார பையன் ஒருத்தன். மகேஷ் என்று பெயர். பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடையவில்லை. வீட்டில் சும்மா இருக்க முடியாமல், ஒரு பெட்டிக்கடை வைத்தான். கடை வாடகை கொடுக்கும் அள்விற்குக் கூட லாபம் இல்லை. கடை நடத்த முடியாமல் மூடிவிட்டான். அவனின் வீட்டுக்குப் அருகாமையில் ஒரு பெரிய குப்பை கொட்டும் இடம் இருந்தது. ஊரின் சில பகுதிகளின் குப்பை பெரும்பாலும் இங்கு தான் கொட்டப்படும். பிள்ளையார் சதுர்த்தி வந்தால், சிறுவர் போவோர் வருவோரிடம் காசு சேர்த்து இந்தக் குப்பை கொட்டப்படும் இடத்தின் பக்கத்தில் உள்ள ஒரு காலி இடத்தில் களிமண் பிள்ளையார் வைத்துக் கொண்டாடுவார்கள். மகேஷுக்கு வேலைவெட்டி இல்லாததால், அவர்களுடன் சேர்ந்து காசு சேர்ப்பதிலும் பிள்ளையார்சிலை வாங்கி வைப்பதிலும் மும்முரமாக இருந்தான். இம்முறை நிறைய பணம் சேர்ந்திருந்தது. வெறுமனே பிள்ளையார் மட்டும் வைக்காமல், ஒரு ஓலைக்கொட்டகைப் போட்டார்கள். அந்த இடம் ஒரு புறம்போக்கு இடம் என்பதால், பிள்ளையார் சதுர்த்தி முடிந்ததும் ஓலைக்கொட்டகை பிரிக்கப்படவில்லை. நம்ம பையனும் ஓலைக் கொட்டகையை கோயில் ரேஞ்சுக்கு பெருக்கி சுத்தம் செய்துவிடுவான். களிமண் பிள்ளையாருக்கு பூபோட்டு எதாவது பக்திப்பாட்டு பாடிடுவான். ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்து, அந்தப் பகுதியில் உள்ள அவனது சொந்தங்கள் ஓலைக்கொட்டகை உள்ள இடத்தில் ஒரு கல் பிள்ளையார்சிலையும் கோயிலும் கட்டுவதென ஏகமனதாக முடிவெடுத்தனர். முதலில் ஒரு சிறுகோயில் கட்டி சின்ன பிள்ளையாரும் வைக்கப்பட்டது. அன்றுமுதல் மகேஷே கோயிலுக்கு அர்ச்சகர்.

விநாயகர் ஸ்துதி, பிள்ளையார் அகவல் என நான்கைந்து புத்தகங்கள் வாங்கி படிக்கத் துவங்கிவிட்டான். சில ஆண்டுகளில் சமூக ட்ரெண்டுக்கு ஏற்றபடி கோயில் மேலும் விரிவாக்கப்பட்டது. அனுமன், ஐயப்பன், நவகிரகங்கள், வைக்கப்பட்டன. நம்மாளும் சலிக்காமல் பூணூல் ஒன்று வாங்கிப் போட்டுக்கொண்டு, முழுநேர பிசினஸில் இறங்கிவிட்டார்.  ஸ்பெஷல் அர்ச்சனை, ஆண்டுப்பிறப்பு, பிரதோஷம் (பிள்ளையார் கோயிலில்?!), நன்கொடை என பிஸினஸில் பிரமாதமான முன்னேற்றம். தற்போது கோயிலில் புதிதாக அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மகேஷும் தகட்டில் சக்கரம் எழுதுவது, குறி சொல்வது என புது பிராஞ்ச் திறந்து பிஸினஸை மேலும் விரிவுபடுத்தியுள்ளார். ஒருமுறை மகேஷோட அம்மா சொன்னாங்க "பிள்ளையாரா இங்க வந்து இருக்கணும்னு விரும்பி இருக்காரு. அதனாலதான் கோவில் வந்தது". நானும் வாய் சும்மா இல்லாமல் "குப்பைத்தொட்டி பக்கத்தில் இருக்க அவருகென்ன அப்படி ஒருஆசை" என்றுகேட்டுவிட்டேன். பார்த்தார்களே ஒரு பார்வை, நான் ஓடிவிட்டேன். மகன் சம்பாதிக்கும் பெருமிதம் அவங்களுக்கு.

கடவுள் வணிகப்பொருளாகிப் போன காலத்தில், பக்தர்களே வாடிக்கையாளர்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பழைய தமிழ்ப்படங்களில் வரும் கிளப் டான்சர்கள், வில்லன்கள்   கிருத்துவர்களாக, முஸ்லீம்களாகக் காட்டுவது ஏன்?

கிளப் டான்ஸ் என்பது முதலில் இந்திப் படங்களில் வந்தன. பிறகு  தென்னிந்தியப் படங்களிலும் அதை ஈயடிச்சான் காப்பியடிக்க கிளப் டான்சர்களாக ரீட்டா, ஜூலி என பெண்கள் வருவார்கள். ஆனால் ஊர்த் திருவிழாவில் ஆடுபவர்கள் முத்தம்மாவாக முனியம்மாவாக இருப்பார்கள். இது ஒரு திரைப்பட ஸ்டீரியோடைப் அவ்வளவே. இந்திப்படங்களில் இவ்வாறு வரக்காரணம், 1950 - 60களிலும் அதற்கு முன்பும் பம்பாயில் கிளப் டான்சர்களாக  ஆங்கிலோ இந்தியர்கள் அதிகமாக இருந்தார்கள். அவர்களுடைய நிறத்திற்காகவும், நுனிநாக்கு ஆங்கிலத்திற்காகவும், இத்தகைய வாய்ப்புகள் கிடைத்தன. இந்தி சினிமாவிலும் சிலர் பயன்படுத்தப்பட்டார்கள்.

இதே அறுபதுகளில் பம்பாயில் மாபியா கும்பல், கள்ளக்கடத்தல் ஆப்கானிய குடியேறிகளால் நடத்தப்பட்டு வந்தது. இதற்கடுத்த கால கட்டங்களில் மாபியாகளில் கரிம்லாலா, ஆஜிமஸ்தான், வரதராஜன் முக்கியமானவர்களாக இருந்தார்கள். பிறகு தாவுத் இப்ராகீம். இதன் காரணமாக பல இந்திப் படங்களில் கடத்தல் வில்லன்கள் முஸ்லீமாக அல்லது தாராவியைச் சார்ந்த தமிழனாக  இருப்பதுண்டு. தென்னிந்தியன் என்று காட்ட வேண்டுமென்றால் நெற்றியில் விபூதி இருக்கும்.

…டான் படத்தில் வில்லன் ஒரு கிருத்துவன். அதன் ரீமேக்கான பில்லாவிலும் அப்படியே. ஆனால் பெயர் மட்டும் 1978ல் குழந்தை கற்பழிப்பு வழக்கில் பிரபலமாயிருந்த ஜஸ்பீர்சிங் என்கிற பில்லா. HAM படத்தில் வில்லன் கிருத்துவர். அதன் காப்பியான ரஜினி நடித்த பாட்சாவிலும் அதேதான், வில்லன் ஆண்டனியாக ரகுவரன் வருவார். இவற்றிலிருந்து ஒரு முரணான விடயம். "தீவார்" திரைப்படத்தில் வரும் கதாநாயகன் ஆஜிமஸ்தான் (தமிழர்  தான்) என்ற மாபியா தலைவனின் இன்ஸ்பிரேஷன் தான். ஆனால் படத்தில் அமீதாப் ஒரு கடவுள் நம்பிக்கையற்ற இந்து. தமிழில் "தீ" என்ற பெயரில் ரீமேக் ஆன ரஜினி நடித்திருந்தார். திரைப்படங்களைப் பொருத்தவரை முஸ்லீம்கள், கிருத்துவர்கள் மட்டுமல்ல யாரைத் தான் ஒழுங்காக சித்தரித்துள்ளார்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கரிமேடு கருவாயன் படத்தில் கவுண்டமணி - செந்தில் சேர்ந்து கலக்கும் ஒரு டப்பாங்குத்து. இசைஞானியின் இசையில். பாட்டோட துவக்கத்தில் ஒரு சின்ன எடிட்டிங் தவறு. கவுண்டமணி உறுமி இருக்கு என்பார் தமுக்கு காண்பிக்கப்படும். தமுக்கு என்பார், உறுமி காண்பிக்கப்படும்.

Friday, April 12, 2013

பைபோலார் டிஸ்ஆர்டர் (Bipolar Disorder) - சொந்த அனுபவம்

நண்பர்கள் உறவினர்கள் அருகில் இல்லாதபோது  கஷ்டம் என்று வந்தால் நமக்கு நாமே தான் ஆறுதல் சொல்லிக்கொள்ள வேண்டும். அத்தகைய ஒருசூழல் எல்லோருடைய வாழ்விலும் வருவதுண்டு. நானும் என் மனைவியும் காதல் திருமணம் புரிந்து கொண்டவர்கள். தனியாக இருக்க வேண்டிய கட்டாயம். எங்களுக்கு அப்போது பொருளாதாரரீதியாக சில பிரச்சனைகள் வேறு இருந்தன. என் தந்தையும் எங்களுடன் இல்லை.  என்னுடைய மனைவியை அவளுடைய பெற்றோர் சுத்தமாக புறக்கணித்து, பிரசவத்திற்கும் வரவில்லை. அவர்களுடைய வெறுப்புக்குக் காரணம்  ஒன்று எங்கள் காதல் திருமணம், இன்னொன்று நான் ஒரு இந்தியத்தமிழன்.

எங்களுக்குக் குழந்தை பிறந்து இரண்டே மாதமான நிலையில், திடீரென சில நாட்களாக என்னுடைய மனைவியின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள். அவள் வழக்கம் போல் இல்லாமல் அதிக பணச்செலவு செய்து கொண்டிருந்தாள். ஆன்லைனில் பல புத்தகங்கள் வாங்குவது , பெயிண்டிங்  ஆர்டர் செய்வது எனப் பல செலவுகள். என் மனைவிக்கு ப்ரெஞ்ச், ஸ்பானிஷ் கொஞ்சம் தெரியும். ஆனால் நன்றாகத் தெரியும் என்று சொல்லிக் கொண்டு அவளுடைய மச்சாளிடம் ப்ரெஞ்சில் கதைத்துக் கொண்டிருப்பாள். ஒரேசமயத்தில்இரண்டு மொழிகளுக்கும் மேற்படிப்புக்கு  பணம் வேறு கட்டிவிட்டாள்.  இதன்காரணமாக எனக்கும் அவளுக்கும் அடிக்கடி சில வாக்குவாதங்கள் நடந்தன. யாரிடம் அவ்வளவாகப் பேசாதவள், எல்லோருக்கும் போன் போட்டு மணிக்கணக்கில்  மொக்கை போடுவாள். நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை,நிறுத்தவும் இல்லை. அவளுடைய அடுத்த மாற்றங்கள் தொடர்ந்தன. இரவு தூங்குவதில்லை, அதிகமான சிந்தனை, படபட எனப் பேச்சு. நான் எதாவது கூறினால், 'என்னைக் கட்டுப்படுத்தாதே, நான் இப்போது தான் முழுசுதந்திரம் பெற்றதாக உணருகிறேன்' எனக் கூறுவாள்.

ஒருநாள் வேலையிலிருந்து வீட்டிற்கு வருகிறேன், வீட்டில் பல புதிய ரோஜாச்செடிகள். எதற்காக இவ்வளவு எனக் கேட்டேன். பிடித்திருந்தது, வளர்க்கப் போகிறேன் என்றாள். ஒரு வாரம் கழித்துப் பார்க்கிறேன், தண்ணீர் விடாமல் அவ்வளவு ரோஜாச்செடிகளும்  வாடிக் கிடந்தன. சில சமயம் தானே சமைக்கப் போவதாகக் கூறுவாள், ஆனால் சமைக்கமாட்டாள். சமையல்கட்டுக்கும், வரவேற்பறைக்கும் நடையாய் நடந்து கொண்டிருப்பாள். நான் சமைக்கிறேன் என்றாலும் விடமாட்டாள். அவளின் செயல்களில் மாற்றங்கள் இருப்பதாகச் சொன்னால் ஒத்துக்கொள்ளமாட்டாள். எனக்குத்தான் பிரச்சனை என்பாள். ஒரு கட்டத்தில் அவள் மீதான வெறுப்பு எனக்குள் கூடிக்கொண்டே போனது. இனி இவளுடன் வாழ இயலாது என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். இப்படியே சில நாட்கள் கழிந்தன.

ஒருமுறை சிகிச்சைக்காக எங்களின் குடும்ப மருத்துவரிடம் சென்றாள். மருத்துவரிடம் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இத்தனை நாட்கள் என்ன நடந்தது என விசாரித்தார். நான் எல்லாவற்றையும் கூறினேன். என்னுடைய மனைவியை மனநல மருத்துவமனைக்கு அனுப்பப் போவதாகவும், குழந்தையை நான் தனியாக கவனிக்க இயலுமா? எனவும் கேட்டார். நான் இயலும் என்றேன். அன்று மாலை நானும் குழந்தையும் மருத்துவர் குறிப்பிட்ட மருத்துவமனைக்குச் சென்றோம். என் மனைவியைச் சந்தித்தேன். குடும்பமருத்துவரை சிறிதுநேரம் திட்டினாள். தன்னை மருத்துவர் தவறாகப் புரிந்துகொண்டு இங்கே அனுப்பிவிட்டதாக கூறினாள். சிறிது நேரம் கழித்து, மருத்துவமனையின் மருத்துவர் என்னை அழைத்துப் பேசினார். நான் என் மனைவியின் செயல்பாடுகளில் மாற்றங்கள் இருப்பதாகக் கூறினேன். நான் வருவதற்கு முன் இதே மருத்துவர் அவளையும் விசாரித்திருக்கிறார். அவளும் என்னுடைய செயலில் மாற்றங்கள் இருப்பதாகக் கூற, மருத்துவருக்கு ஒரே குழப்பம். குடும்ப மருத்துவருக்கு தொலைபேசினார். பிறகே அவர் குழப்பம் தீர்ந்தது. என் மனைவி "குழந்தை எப்படி இருக்கிறது, என்ன சாப்பிட்டாள்" என ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. "எனக்கு இங்கு சாப்பாடு பிடிக்கவில்லை, நாளை வரும்போது சமைத்துக்கொண்டுவா" என்றாள். மறுநாள் அவளுக்காக சமைத்துக்கொண்டு போனேன், ஆனால் அவளோ கரண்ட் பில் கட்டிவிட்டாயா, வாடகை கட்டிவிட்டாயா என வழக்கம்போல திட்டத்தொடங்கிவிட்டாள். கிளம்பும்போது, அவளுடைய தோடுகள், மேக்கப் பொருட்களைக் கொண்டுவருமாறு சொன்னாள். புதிதாகச் சேர்ந்த வேலைக்குப் போகமுடியவில்லை, வேலை போய்விடுமோ என்ற பயம் ஒரு பக்கம். மனைவியின் நிலை என்ன ஆகும் என்பது ஒரு பக்கம். இரண்டு மாதக் குழந்தையை ஒரு பக்கம். என் வாழ்க்கையில் இப்படி ஒரு வேதனையை நான் அனுபவித்ததே இல்லை எனலாம்.


அறையைவிட்டு வெளியேறும்போது தலைமைமருத்துவர் என்னை சந்திக்க வேண்டுமென்றார். போய் சந்தித்தேன். நடந்தவற்றை விசாரித்தார். என்னுடைய மனைவிக்கு வந்திருப்பது பைபோலார் டிஸ்ஆர்டர் என்றார். அவர் சொன்னதாவது: மனிதனுக்கு ஏற்படும் Mood ஒரு அலை போல, சில சமயம் மகிழ்ச்சி சில சமயம் கவலை என்று வரும். ஆனால் அது ஒரு கட்டுக்குள்ளே இருக்கும். பைபோலார் டிஸ்ஆர்டர் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியும் கவலையும் உச்சமாக இருக்கும். மகிழ்ச்சியின் உச்சத்தில் அபரிமீதமான எனர்ஜி (Mania) வெளிப்படும். மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்ததும் அடுத்து அதள பாதாளமாக கவலை (Major depression) வந்துவிடும். அக்கட்டத்தில் ஒருவர் தற்கொலை கூட செய்துகொள்வார்கள். சரியான சமயத்தில் சிகிச்சை அளித்தால், பைபோலார் டிஸ் ஆர்டர் போன்ற மனசிக்கல்களை மருந்தின் மூலம் குணப்படுத்த முடியும். 

என் மனைவி சரியான சமயத்தில் சிகிச்சைப் பெற்றதால், அடுத்தகட்ட பாதாள கவலை Phase-க்குப் போகவில்லை.  சுமார் மூன்று வார சிகிச்சைக்குப் பின்னர், என் மனைவி குணமடைந்துவிட்டாள். தற்போது என்னுடைய மனைவி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறாள். 

நான் மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் எச்சரிக்கையாய் இருப்பது நன்று. வந்தபின் நொந்து கொள்வதைவிட, வருமுன் காப்பது நலம். உங்கள் உற்றார் உறவினர் இதுபோன்ற எதாவது மனச்சிக்கல்கள் இருந்தால், உரிய சிகிச்சை எடுக்க உதவுங்கள். ஏனென்றால் இதுபோன்ற தனிநபரின் செயல்பாடுகளை நெருங்கியவர்களால் மட்டுமே உணர முடியும். எனக்கு நேர்ந்ததைப் போல உங்களுக்கும் நேராமல் பார்த்துக்கொள்வீராக. கொஞ்ச நாட்கள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு, புட்டிப்பாலுடன் திரிய வேண்டிவந்தது. ஆனால் எப்படியோ யார் உதவியும் இல்லாமல் தனியாளாக சமாளித்துவிட்டேன்.


பதினாறு வயசு வந்த மயிலே

சில்க் ஸ்மிதாவை பிடிக்காத தமிழ் திரைப்பட ரசிகர்களே இருக்க முடியாது. அப்படி ஒரு அழகியல் எளிமை. ஆடி ரசிகர்களை மகிழ்வித்தாலும், சினிமாவுலகில் அனாதையாக விடப்பட்டு கஷ்டத்தை மட்டுமே அனுபவித்த ஜீவன். அவரைப் போற்றிப் புகழ்ந்து திருவாளர் கங்கையமரன் தன்னுடைய  "செண்பகமே!செண்பகமே! படத்தில் இசைஞானியின் இசையில் ஒரு பாட்டு வைத்திருக்கிறார். இப்பாடல் ராமராஜன், செந்தில், எஸ்.எஸ். சந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி என சும்மா களைகட்டும். சரக்குடன் ப்ரேக் டான்ஸ் வேறு.
 #பதினாறு வயசு வந்த மயிலே மயிலே எங்களை பாடபடுத்தடி மயிலே மயிலே
……#அடக்கி வச்சா சொன்னபடிதான் கேக்க மறுக்குது; அதுக்கு மட்டும் நாளுகிழமை பாக்க மறுக்குது.
…எல்லாம் கங்கையமரனின் வரிகள்.

…சரி பின்னாடி யார் ஆடுவது என்று பார்த்தால், சட்டான்பிள்ளை வெங்கட்ராமனும் (தாடி வைத்திருப்பவர்)  பக்கிரிசாமியும் (சிவப்பு சட்டை,இடுப்பில் துண்டு அணிந்திருப்பவர்). இவர்கள் இருவரும் பழைய தமிழ்த் திரைப்பட மற்றும் நாடக நடிகர்கள். கங்கையமரன் இயக்கிய சில படங்களிலும் நடித்துள்ளார்கள். 60களின் நகைச்சுவை நடிகர்கள். அதிர்ஷ்டம் இருந்திருந்தால் பலரும் நினைவுகூறக்கூடிய அளவிற்கு சிறந்த நடிகர்களாக வந்திருப்பார்கள். இவர்களில் சட்டான்பிள்ளை வெங்கட்ராமன் தூக்குத்தூக்கி படத்தில் சிவாஜிகணேசனுடன் நடித்திருக்கிறார். இப்படத்தில் தான் இவருடன் சட்டான்பிள்ளை என்ற அடைமொழி ஒட்டிக்கொண்டது. (குருகுலம், திண்ணைப்பள்ளி இருந்த காலங்களில் வகுப்பின் தலைமைமாணவனாக விளங்குபவரை சட்டான்பிள்ளை என்பார்கள். அதாவது Class leader.) "குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்" பாடலில் சிவாஜிகணேசனுடன் நடிப்பது இவர்தான். சட்டான்பிள்ளை வெங்கட்ராமனும் பக்கிரிசாமியும் இணைந்து நடித்த இன்னொரு பிரபலமான படம் "அடுத்தவீட்டுப் பெண்". இப்படத்தில் டி.ஆர்.ராமசந்திரனுடைய தோழர்களில் ஒருவராக வருவார். பக்கிரிசாமி அங்சலிதேவியின் பாடுவாத்தியார்."கண்களும் கவிபாடுதே" பாடலில் அருமோனியத்துடன் அட்டகாசம் செய்வார். இவருக்கு திருச்சி லோகநாதன் பின்னணி பாடியிருப்பார். டி.ஆர்.ராமசந்திரனுக்கு சீர்காழி கோவிந்தராஜன். இதுபோன்ற ஒரு நுட்பமான போட்டிப்பாடல் மிகவும் அரிது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@