Tuesday, May 29, 2007

அணுமின் ஓநாயின் பிடியில் இந்திய சுற்றுப்புற சூழல் -- பாகம்-1

ஷெர்னொபில், த்ரிமைல் தீவு, டொகிமோரா அணுகரு விபத்துகள் எல்லோரும் அறிந்ததே! குறிப்பாக ஷர்னோபில்விபத்து உக்ரைன்(முந்தய சோவியத் ரஷ்யாவில்)1986ம் ஆண்டு 2000க்கும் மேற்ப்பட்ட மக்களை செறித்தது. இந்திய அணுசக்திப்பயணம் இது போன்ற ஓர் இலக்கு நோக்கியே செல்கிறது. எந்தவித தொழிற்சாலையானாலும் பாதுகாப்பு அவசியமானது. குறிப்பாக, அணுமின் மற்றும் அணுமின் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு மிக மிக அவசியம். ஏனென்றால், இத்தகைய அணுமின் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்து, பாரதூரமான விளைவுகளை உண்டாக்கக்கூடியவை. அடுத்த தலைமுறைகளையும் தாக்கக்கூடியவை. மரபணு சார்ந்த பிரச்சனைகளை உருவாக்கக்கூடியவை.

பொதுவாக, அணுசக்தி மற்றும் அணுஆயுதங்கள் உற்பத்திக்கு முக்கியமான மூலப்பொருள் யுரேனியம், தோரியம் போன்றவற்றின் தாதுப்பொருட்களாகும். இத்தகைய தாதுக்களின் சுரங்கங்கள் மிகவும் ஆபத்தானவை. இங்கு வேலை செய்பவர்கள் அனைவரும் கதிர்வீச்சுடைய தாதுக்களின் துகள்களை சுவாசித்தபடி வேலைசெய்கிறார்கள். இதுவும் ஒரு வகை உழைக்கும் வர்க்கத்தை சுரண்டும் போக்குதான். ஆனால் மேலைநாடுகளில் இத்தகைய சுரங்கங்களுக்கு அதிகமாக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் ‘ஜடிகுடாவில் புத்தர் அழுகிறார்’ என்றொரு ஒளிப்பதிவு வெளியானது. “தி வீக்” இதழும் அதைப்பற்றி விரிவாக எழுதி இருந்தார்கள். இது போன்ற சுரங்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் கதிரியக்கப்பொருட்கள் மிகையாக உள்ளன. இத்தகைய கழிவுகள் போதிய அளவு சுத்திகரிப்படாமல் வெளியேற்றப்படுகின்றன. ஜடிகுடாவின் சுரங்கத்தில் தாதுபொருட்கள் தவிர்த்தவை கட்டுமான பணிகளுக்கும் சாலையிடுவதற்கும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு செய்வதால் கதிரியக்கம் சுற்றுப்புற்ச்சூழலை வெகுவாக பாதிக்கிறது. கடந்த நூற்றாண்டில் இந்திய அணுமின் சார்ந்த நிலையங்கள் சில விபத்துக்களை சந்தித்தன.இவை மற்ற தொழிற்சாலைகளோடு ஒத்துநோக்கும் போது எண்ணிக்கை குறைவு எனினும் விளைவுகள் மிகக்கடுமையானவை. அகில உலக கதிரியக்க ஆணையத்தின் அறிக்கைப்படி 20mSv (milli Sievert) கதிர்வீச்சு ஆயிரத்தில் ஒருவருக்கு கதிரியக்க புற்றுநோயை உருவாக்கவல்லது. ஆனால் இந்தியாவின் அணுசக்தி கண்கானிப்பகம் வெளியிட்ட அறிக்கையில், 1986 முதல் 1990 வரை அணுசக்தித்துறையில் உள்ள 3-5 சதவிகித தொழிலாளர்கள் 20mSv கதிர்வீச்சைவிட அதிகமாக பெற்றுள்ளனர். அணு உலைகளில் பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் உபபொருட்கள் புளுடொனியம் (புளுடொனியம் அணுஆயுதங்கள் தயாரிப்பின் மூலப்பொருள்) தயாரிக்கப்பயன்படுகிறது. புளுடொனியம் யுரேனியத்தைவிட 30000 மடங்கு கதிர்வீச்சு கொண்டது. புளுடொனியத்தைப் பிரித்தெடுக்கும்முறை அதிக கதிர்வீச்சும் அதிக மில்லியன் பணச்செலவும் உடையது. கல்பாக்கத்தில் இப்பிரிவு kalpakkam reprocessing plant (KARP) என இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

திரு.எம்.வி.ரமணா அவர்கள் பாஸ்ட் ப்ரீட் உலைகள்(fast breed rector - FBR) குறித்து சில கட்டுரைகளை ‘தி ஹிந்து’ நாளிதழில் வெளியிட்டுள்ளார். அவர் கூறுவது என்னவெனில் FBR மிகுந்த வெப்பத்தை வெளியிடக்கூடியவை, பெரிய விபத்து ஏற்படுத்தக்கூடியவை, ஆதலின் பாதுகாப்பு மிகவும் இன்றியமையாதது. FBTR (fast breed test reactor) மற்றும் PFBR (prototype fast breed reactor) அதிக விபத்துகளை உண்டாக்கக்கூடியவை. பிரான்சில் உள்ள ஸுப்பெர்னிக்ஸ் அணுவுலை FBR வகையைச் சார்ந்தது. இது கடந்த 10 வருடத்தில் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே பயனில் இருந்து வந்துள்ளது.

பி.கு.: இந்த கட்டுரையை நான் முதலிலேயே எழுதிவிட்டேன். ஆனால் சில மொக்கை பதிவுகளால், இதனுடைய இடுகை தள்ளிப்போடப்பட்டு, இப்போது இதன் பாகம்-2-வுடன் வெளிவரும் நிலை.

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய